ஃபிரான்ஸ் நாட்டை தொடர்ந்து பெல்ஜியத்திலும் இஸ்லாமிய பெண்கள் முகத்திரைக்கு எதிரான சட்டம் நேற்று 22/7/2011 முதல் அமலுக்கு வந்துள்ளது. பெல்ஜியம் நாட்டில் 10 மில்லியன் மக்களில் 450,000 அளவுக்கு முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிந்து பொது இடங்களுக்கு செல்ல அனுமதியில்லை என்பதாக சட்டம் நிறைவேற்றியுள்ளது பெல்ஜியம் அரசு.ஃபிரான்ஸ் அரசு கூறியது போல் தங்கள் நாட்டில் முகத்தை மறைத்து தங்களுடைய அடையாளத்தை மறைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என பெல்ஜியம் அரசு தரப்பும் தெரிவித்துள்ளது.எந்த பெண்ணாவது சட்டத்தை பின்பற்ற தவறினால், அவர் 137,50 யூரோக்கள் ($ 195) மற்றும் ஏழு நாட்கள் வரை சிறை தண்டனை அளிக்கப்படும் என்றும் நாட்டின் பாதுகாப்பு என்ற அடிப்படையில்தான் இந்த சட்டத்தை இயற்றியதாகவும் அந்த அரசு தெரிவிக்கிறது.
இந்த சட்டம் பெல்ஜியத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு மத்தியில் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.இந்த சட்டம் முஸ்லிம்களின் கண்ணியத்தை கெடுக்கும் வகையில் உள்ளதாக முஸ்லிம்கள் கருதுகின்றனர்.இந்த சட்டத்திற்கு எதிராக இரண்டு பெண்கள் பெல்ஜியம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.அவர்கள் தெரிவிப்பதாவது "நாங்கள் இந்த சமுதாயத்திலிருந்து தனிமை படுத்தப் பட்டது போல் உணருகிறோம்!முகத்திரை அணிவது எங்கள் உரிமை! இந்த சட்டம் நாட்டில் மத சுதந்திரம், தனிப்பட்ட உரிமை, கருத்து சுதந்திரம் மற்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே சமத்துவம் போன்றவற்றிற்கு எதிராக இருக்கிறது" என்பதாக அவர்கள் கூறினார்கள்.
குறிப்பு : பிரான்ஸ் நாட்டை போல் முகத்திரை அணிவதற்கு மட்டும்தான் பெல்ஜியத்திலும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது தலையையும் உடலையும் மறைப்பதற்கு அல்ல.
நன்றி : Onislam.net