கேள்வி : அல்லாவின் அருளால் எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.அல்ஹம்துலில்லாஹ்.அல்லாஹ்வுக்கும்,நம்முடைய உயிரிலும் மேலான ரசூலே கரீம் சள்ளல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுக்கும் பிடித்த நல்ல வீரமுள்ள பெயரை அனுப்பி தரவும் .மேலும் இது எனக்கு இரண்டவது குழந்தை அந்த குழந்தையுக்கு ஹதீஸ் பிரகாரம் செய்ய வேண்டிய செய்கைகள் தரவும்.
- ABDUL GHANI, U A E. AL AIN
பதில் : உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : முஸ்லிம் (4320)
மேலே உள்ள செய்தியில் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது அப்துல்லாஹ் மற்றும் அப்து ரஹ்மான் என்ற குறிப்பிடப்படுகின்றது. ஆக அந்த இரண்டு பெயர்களில் எதையாவது நீங்கள் வைத்துக் கொள்ளலாம். அழகிய பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும். கண்டிப்பாக இந்த இரண்டையும் தான் சூட்ட வேண்டும் என்ற சட்டம் இல்லை. என்பதையும் கவணத்தில் கொள்ளவும்.
குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய சில காரியங்கள்
தஹ்னீக்
குழந்தை பிறந்த உடன் பேரித்தம்பழத்தை மெண்டு அதன் வாயில் தடவும் வழமை நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்தது. இதற்கு தஹ்னீக் என்று அரபு மொழியில் சொல்லப்படுகிறது.
(முஹாஜிர்களிலேயே) இஸ்லாத்தில் பிறந்த முதல் குழந்தை அப்துல்லாஹ் பின் ஸþபைர் ஆவார். (அவர் பிறந்தவுடன்) அவரை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தனர். நபி (ஸல்) அவர்கள் ஓரு பேரிச்சம் பழத்தை எடுத்து அதை மென்று அவரது வாய்க்குள் நுழைத்தார்கள். அவரது வயிற்றினுள் முதலாவதாக நுழைந்தது நபி (ஸல்) அவர்களது உமிழ் நீரே ஆகும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி (3910)
எனக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தவுடன் அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தேன். நபி (ஸல்) அவர்கள் அதற்கு இப்ராஹீம் என்று பெயர் வைத்துவிட்டு பேரித்தம்பழத்தை மெண்டு அதன்வாயில் தடவினார்கள். அதற்காக பிரார்த்தனை செய்துவிட்டு என்னிடம் ஒப்படைத்தார்கள். (இப்ராஹீம்) அபூமூஸாவின் மக்களில் மூத்தவராக இருந்தார்.
அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி), நூல் : புகாரி (5467)
அகீகா
குழந்தை பிறந்த ஏழாம் நாளில் ஆண்குழந்தையாக இருந்தால் அதற்காக இரண்டு ஆடுகளையும் பெண்குழந்தையாக இருந்தால் அதற்காக ஓருஆட்டையும் அறுத்து ஏழை எளியவர்கள் உறவினர்களுக்கு உணவளிப்பதற்கு அகீகா என்று சொல்லப்படுகின்றது. இவ்வாறு செய்வதை நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்துள்ளார்கள். ஆனால் கடமையாக்கவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பையன் (பிறந்த) உடன் அகீகா (கொடுக்கப்படல்) உண்டு. ஆகவே அவனுக்காக (ஆடு அறுத்து) குர்பானி கொடுங்கள். அவன் (தலை முடி களைந்து) பாரத்தை இறக்கிவிடுங்கள் என்று அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்.
அறிவிப்பவர் : சல்மான் பின் ஆமிர் (ரலி), நூல் : புகாரி (5472)
எத்தனை ஆடுகள் அறுக்க வேண்டும்?
நபி (ஸல்) அவர்களிடம் அகீகாவைப் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் மாறுசெய்வதை நான் விரும்பமாட்டேன். யாருக்கேனும் குழந்தை பிறந்து அதற்காக அவர் (ஆட்டை) அறுத்து வணக்கம்புரிய விரும்பினால் அவர் ஒரே மாதிரியான இரண்டு ஆட்டை ஆண்குழந்தைக்கும் ஒரு ஆட்டை பெண்குழந்தைக்கும் கொடுக்கட்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல் : அஹ்மத் (6530)
விரும்புபவர் அகீகா கொடுக்கட்டும் என்று மேலுள்ள ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அகீகா கொடுப்பது கடமையில்லை. கொடுப்பது சிறந்தது என்பது அறிந்துகொள்ளலாம்.
ஆண்குழந்தைக்கு ஓரு ஆட்டை அறுத்துப் பலியிடுவதற்கும் ஆதாரம் உள்ளது. இதை பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.
நபி (ஸல்) அவர்கள் ஹசனுக்கும் ஹ‚ஸைனுக்கும் ஒரு ஆட்டை அகீகாவாக தந்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அபூதாவூத் (2458)
பெயர் வைத்தலும் முடியயை களைதலும்.
அகீகாக்கொடுக்கும் போதே குழந்தைக்கு பெயர் வைத்து அதன் முடியை களைவது நபிவழியாகும்.
ஒவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் (ஆட்டை) அதற்காக அறுக்கப்படும். அதன் முடி களையப்பட்டு அதற்கு பெயர் சூட்டப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : சமுரா பின் ஜ‚ன்துப் (ரலி), நூல் : அபூதாவூத் (2455)
கத்னா செய்தல்.
ஆண்களின் பாலுறுப்பில் இருக்கும் தேவையற்ற தோல்பகுதியை அகற்றுவதற்குப் பெயர் தான் கத்னா என்பது. இவ்வாறு செய்வதால் பாலுறுப்பினுள் விந்தோ சிறுநீரோ தங்கும் நிலை ஏற்படாது. இதன் மூலம் பாலுறுப்பு சுத்தமாக வைத்துக்கொள்ளப்படுவதால் ஏராளமான நோய்கள் அண்டுவதில்லை.
இல்லறவாழ்வின் போது கணவன் தன் மனைவியை திருப்தியடையச் செய்வதற்கு கத்னா காரணமாக உள்ளது. அறிவுப்பூர்வமான இந்த வழிமுறை கடைபிடிக்குமாறு இஸ்லாம் ஆண்களுக்குக் கூறுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக்கொள்வது, மீசையைக் கத்தரித்துக்கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி), நூல் : புகாரி (5889)
குறிப்பு – மேலதிக தகவல்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பேச்சாளரும் மேலப்பாளையம் இஸ்லாமியக் கல்லூரியின் ஆசிரியருமான சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள் எழுதிய குழந்தை வளர்ப்பு என்ற புத்தகத்தை பயன்படுத்திக் கொள்ளவும்.
பதில் : ரஸ்மின் MISc