கேள்வி : kanavugalum adan palangalum pattri koora mudiyuma please...
தமிழாக்கம் : தயவுசெய்து கணவுகளும் அதன் பலன்களும் பற்றி கூற முடியுமா?
- fathima muzniya(usa)
பதில் : கனவுகளின் பலன்கள் பற்றி பல செய்திகள் திருமறைக் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் இடம் பெற்றுள்ளன. அவற்றில் சிலதை இங்கு தருகிறோம்.
கனவுகளின் பலன்கள் விஷயத்தில் இன்று நமது சமுதாயத்தில் பலர் பலவிதமான கருத்துக்களை கூறி வருகிறார்கள். கனவுகளின் பலன்களை படித்த அறிஞர்கள் அறிவார்கள். பாமரர்கள் அறியமாட்டார்கள் என்றெல்லாம் கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றித் திரியும் போலிகள் நமது சமுதாயத்தில் நிறையவே இருக்கிறார்கள்.
ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்த வரையில் நமக்குத் தோன்றும் கனவுகளுக்கு விளக்கத்தை நாமே தீர்மானித்துக் கொள்ள முடியும் எந்த போலிகளிடமும் ஏமாற வேண்டிய அவசியம் இல்லை.
நல்ல கனவுகள் என்பவை அல்லாஹ்வின் புறத்தால் நமக்கு தரப்படுபவையாகும். அல்லாஹ் தரும் கனவுகளுக்கு வேறு ஒருவர் விளக்கம் சொல்ல வேண்டிய தேவையே இருக்காது அல்லாஹ்வே அதனை விளக்கமாகத் தான் தருவான்.
நாம் கனவு கண்டால், நாம் காணும் கனவில் என்ன தகவல் வருகிறதோ அதுதான் அந்தக் கனவுக்கு விளக்கமாக இருக்கும்.
'அனைத்தையும் அறிந்தவனை (அல்லாஹ்வை) போல் வேறு எவரும் உமக்கு விளக்க முடியாது' என்று அல்லாஹ் கூறுகிறான். (திருக்குர்ஆன் 35:14)
அனைத்து விஷயத்தையும் விளக்கமாக சொல்லும் இறைவன் கனவையும் விளக்கமாகத் தான் தருவான் என்பதை மேற்கண்ட வசனத்தின் மூலம் நாம் விளங்க முடியும்.
குர்ஆனிலும், நபி மொழிகளிலும் இடம் பெற்ற சில கனவுகள் பற்றிய செய்திகளை இங்கு தருகிறோம்.
தான் ஹஜ் செய்வதாக நபியவர்கள் கண்ட கனவு.
சொந்த ஊரிலிருந்து விரட்டப்பட்ட நபியவர்கள். மீண்டும் தமது ஊரான மக்காவுக்குப் போய் ஹஜ் செய்வதைப் போன்று கனவு கண்டார்கள் அதனை அல்லாஹ் நிறைவேற்றி வைத்தான்.
{لَقَدْ صَدَقَ اللَّهُ رَسُولَهُ الرُّؤْيَا بِالْحَقِّ لَتَدْخُلُنَّ الْمَسْجِدَ الْحَرَامَ إِنْ شَاءَ اللَّهُ آمِنِينَ مُحَلِّقِينَ رُءُوسَكُمْ وَمُقَصِّرِينَ لَا تَخَافُونَ فَعَلِمَ مَا لَمْ تَعْلَمُوا فَجَعَلَ مِنْ دُونِ ذَلِكَ فَتْحًا قَرِيبًا} [الفتح: 27அல்லாஹ் தனது தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான். (எனவே) அல்லாஹ் நாடினால் நீங்கள் பாதுகாப்பாகவும், உங்கள் தலைகளை மழித்தும், தலை முடியைக் குறைத்தும், அஞ்சாதும் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைவீர்கள். நீங்கள் அறியாததை அவன் அறிவான். இது அல்லாத சமீபத்திய வெற்றியையும் அவன் ஏற்படுத்தி விட்டான். (அல்குர்ஆன் 48:27)
யூசுப் நபியின் கனவு
நபி யுசுப் அவர்கள் சிறு பிள்ளையாக இருக்கும் போது கண்ட கனவைப் பற்றி இறைவன் திருமறைக் குர்ஆனிலே குறிப்பிடுகிறான்.
{إِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ } [يوسف: 4'என் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் நான் (கனவில்) கண்டேன். அவை எனக்குப் பணியக் கண்டேன்' என்று யூஸுஃப் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன் 12:4)
நபி யுசுப் அவர்கள் பார்த்ததாகச் சொன்ன மேற்கண்ட கனவின் விளக்கம் என்ன என்பதை இதே அத்தியாயத்தின் 100-வது வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
{وَرَفَعَ أَبَوَيْهِ عَلَى الْعَرْشِ وَخَرُّوا لَهُ سُجَّدًا وَقَالَ يَا أَبَتِ هَذَا تَأْوِيلُ رُؤْيَايَ مِنْ قَبْلُ قَدْ جَعَلَهَا رَبِّي حَقًّا وَقَدْ أَحْسَنَ بِي إِذْ أَخْرَجَنِي مِنَ السِّجْنِ وَجَاءَ بِكُمْ مِنَ الْبَدْوِ مِنْ بَعْدِ أَنْ نَزَغَ الشَّيْطَانُ بَيْنِي وَبَيْنَ إِخْوَتِي إِنَّ رَبِّي لَطِيفٌ لِمَا يَشَاءُ إِنَّهُ هُوَ الْعَلِيمُ الْحَكِيمُ } [يوسف: 100தமது பெற்றோரைச் சிம்மாசனத்தின் மீது அமரச் செய்தார். அவர்கள் அனைவரும் அவருக்குப் பணிந்தனர். 'என் தந்தையே! முன்னர் நான் கண்ட கனவுக்கு விளக்கம் இதுவே. அதை என் இறைவன் உண்மையாக்கி விட்டான். சிறையிலிருந்து வெளிவரச் செய்த போது, அவன் எனக்குப் பேருதவி செய்தான். எனக்கும் என் சகோதரர்களுக்கும் இடையே ஷைத்தான் பிரிவினை ஏற்படுத்திய பின் உங்களைக் கிராமத்திலிருந்து கொண்டு வந்து சேர்த்து விட்டான். என் இறைவனோ நாடியதை நுணுக்கமாகச் செய்பவன்; அவன் அறிந்தவன்; ஞானமிக்கவன்' என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 12:100)
யூசுப் நபியவர்கள் பிற்காலத்தில் நாட்டின் ஜனாதிபதியாக ஆகி அவர்களின் ஆட்சியின் கீழ் அவர்களின் தாய் தந்தையர் வாழும் நிலை ஏற்படும் என்பதையும் அவரது அண்ணன்மார்களும் அவருக்குக் கீழே இருக்கும் நிலை ஏற்படும் என்பதையும் சூரியன், சந்திரன், பதினொரு நட்சத்திரங்கள் அவருக்குப் பணிவதாகக் காட்டுவதன் மூலம் இறைவன் அறிவித்தான்.
யுசுப் நபியவர்கள் கண்ட கனவு அப்படியே நிறைவேறியது.
மன்னரின் கனவு
யூசுப் நபி காலத்தில் எகிப்தை ஆண்ட மன்னர் கண்ட கனவும் அந்தக் கனவுக்கு யூசுப் நபி அளித்த விளக்கமும் 12வது அத்தியாயம் 43 முதல் 49 வரை கூறப்பட்டுள்ளது.
'கொழுத்த ஏழு மாடுகளை, மெலிந்த ஏழு மாடுகள் தின்பதாகவும், பசுமையான ஏழு கதிர்களையும், காய்ந்த வேறு கதிர்களையும் நான் (கனவில்) கண்டேன். பிரமுகர்களே! நீங்கள் கனவுக்கு விளக்கம் கூறுவோராக இருந்தால் எனது கனவுக்கு விளக்கம் தாருங்கள்!' என்று மன்னர் கூறினார்.'இவை அர்த்தமற்ற கனவு. அர்த்தமற்ற கனவின் விளக்கத்தை நாங்கள் அறிந்திருக்கவில்லை' என்று அவர்கள் கூறினர்.'நான் உங்களுக்கு அதற்கான விளக்கம் தருகிறேன். என்னை அனுப்புங்கள்!' என்று அவ்விருவரில் விடுதலையானவர் நீண்ட காலத்திற்குப் பின் நினைவு வந்தவராக கூறினார்.யூஸுஃபே! உண்மையாளரே! ஏழு மெலிந்த மாடுகள், ஏழு கொழுத்த மாடுகளைத் தின்றதற்கும், ஏழு பசுமையான கதிர்கள் மற்றும் காய்ந்த கதிர்களுக்கும் எங்களுக்கு விளக்கம் தருவீராக! மக்களிடம் (இத்தகவலுடன்) நான் திரும்பிச் செல்ல வேண்டும். அவர்கள் விளங்கிக் கொள்வார்கள் (என்றார்.)தொடர்ந்து ஏழு ஆண்டுகள் விவசாயம் செய்வீர்கள். அறுவடை செய்தவற்றில் உண்பதற்காக குறைவான அளவைத் தவிர மற்றவற்றைக் கதிர்களுடன் விட்டு வையுங்கள்!இதன் பிறகு பஞ்சமான ஏழு (ஆண்டுகள்) வரும். அவற்றுக்காக நீங்கள் முன்னர் இருப்பு வைத்தவற்றில் சிலதைத் தவிர மற்றவற்றை அவை சாப்பிட்டு விடும்.'இதன் பிறகு மக்களுக்கு மழை பொழியும் ஆண்டு வரும். அந்த ஆண்டில் பழ ரசங்களைப் பிழிவார்கள்' (என்றார்)(அல்குர்ஆன் 12:43-49)
மெலிந்த ஏழு மாடுகள் = வரட்சியான ஏழு ஆண்டுகள்
கொளுத்த ஏழு மாடுகள் = செழிப்பான ஏழு ஆண்டுகள்
மெலிந்த மாடு கொளுத்த மாட்டைச் சாப்பிடுதல் = வரண்ட ஆண்டுகள் செழிப்பான ஆண்டுகளின் சேமிப்பைச் சாப்பிடுதல்
இரண்டு கைதிகளின் கனவு
யூசுப் நபியுடன் வேறு இரண்டு கைதிகளும் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த இரு கைதிகளும் வெவ்வேறு கனவுகளைக் கண்டு அதற்கான விளக்கத்தை யூசுப் நபியிடம் கேட்டனர்.
{وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَيَانِ قَالَ أَحَدُهُمَا إِنِّي أَرَانِي أَعْصِرُ خَمْرًا وَقَالَ الْآخَرُ إِنِّي أَرَانِي أَحْمِلُ فَوْقَ رَأْسِي خُبْزًا تَأْكُلُ الطَّيْرُ مِنْهُ نَبِّئْنَا بِتَأْوِيلِهِ إِنَّا نَرَاكَ مِنَ الْمُحْسِنِينَ } [يوسف: 36அவருடன் இரு இளைஞர்கள் சிறைக்குச் சென்றனர். 'நான் மது ரசம் பிழிவதைப் போல் கனவு கண்டேன்' என்று ஒருவர் கூறினார். 'நான் என் தலையில் ரொட்டியைச் சுமந்திருக்க, அதைப் பறவை சாப்பிடக் (கனவு) கண்டேன்' என்று இன்னொருவர் கூறினார். 'இதன் விளக்கத்தை எங்களுக்குக் கூறுவீராக! உம்மை நன்மை செய்வோரில் ஒருவராக நாங்கள் காண்கிறோம்' (என்றனர்).(அல்குர்ஆன் 12:36)
இதற்கு யூசுப் நபி அளித்த விளக்கமும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
'என் சிறைத் தோழர்களே! உங்களில் ஒருவர் தனது எஜமானனுக்குப் மதுவைப் புகட்டுவார். மற்றவர் சிலுவையில் அறையப்படுவார். அவரது தலையைப் பறவைகள் சாப்பிடும். எது குறித்து விளக்கம் கேட்கிறீர்களோ அந்த விஷயம் முடிவு செய்யப்பட்டு விட்டது' (என்றார்.)(அல்குர்ஆன் 12:41)
தனது தலையின் மேல் ரொட்டியைச் சுமந்து செல்லும் போது அவற்றைப் பறவைகள் உண்பது போல் கனவு கண்டவர் மரண தண்டனை அடைவார் என்று யூசுப் நபி விளக்கினார்கள். அவரது உணவு முடிந்து விட்டது என்பதை பறவைகள் சாப்பிட்டதன் மூலம் அல்லாஹ் காட்டினான். அதன் பலனும் அவ்வறே அமைந்தது.
பழரசம் பிழிவது போல கனவு கண்டவருக்கு அவர் கனவு கண்டது போல் எஜமானருக்கு பழரசம் பிழிந்து புகட்டும் வேலை கிடைக்கும் என்றார்கள்.
இந்த இருவரும் எதைக் கனவில் கண்டார்களோ அதற்கேற்ப பலனும் அமைந்தது.
யூசுப் நபியிடம் இரு கைதிகள் விளக்கம் கேட்டது போல் நாமும் மற்றவர்களிடம் விளக்கம் கேட்கலாம் என்று யாரும் நினைக்கக் கூடாது. இறைத்தூதர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து செய்திகள் கிடைப்பதால் அவர்களால் மிகத் தெளிவான பலனைக் கூற முடியும்.
இறைத்தூதராக இல்லாத ஒருவரிடம் பலன் கேட்க எந்தச் சான்றும் இல்லை.
லைலதுல் கத்ர் இரவு பற்றிய கனவு
லைலதுல் கத்ர் இரவில் மழை பெய்வது போலவும், அதனால் தரை சேறும் சகதியுமாகி அதில் ஸஜ்தாச் செய்வது போலவும் நபிகள் நாயகம் (ஸல்) கனவு கண்டார்கள். அவர்கள் கனவு கண்டவாறு மறுநாள் இரவு மழை பெய்து, களி மண்ணில் அவர்கள் ஸஜ்தாச் செய்தனர். எதைக் கண்டார்களோ அது போலவே அதன் பலனும் அமைந்தது.
புகாரி 813, 2016, 2018, 2027, 2036, 2040 ஆகிய ஹதீஸ்களில் இதைக் காணலாம்.
பல்வேறு அளவுகளில் சட்டையைக் காணுதல்
மனிதர்கள் பலவித அளவுகளில் சட்டை அணிந்தவர்களாக நபிகள் நாயகம் கனவு கண்டார்கள். சிலரது சட்டை மார்பு வரையும், சிலரது சட்டை அதை விடக் குறைவாகவும் இருந்தது. உமர் அவர்களின் சட்டை தரையில் இழுபடும் அளவுக்கு இருந்தது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். இதன் விளக்கம் என்ன என்று உமர் (ரலி) கேட்ட போது 'மார்க்கம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) விளக்கம் தந்தார்கள். (புகாரி 23, 3691, 7008, 7009)
அதிகமான மார்க்கப் பற்று உள்ளவர் பெரிய ஆடை அணிந்தது போன்றும், மார்க்கப்பற்று குறைவாக உள்ளவர் அதற்கேற்ப சிறிய அளவில் சட்டை அணிந்தது போன்றும் கனவு கண்டு நபிகள் நாயகம் விளக்கமும் தந்துள்ளார்கள்.
எதிரிகளின் தோல்வியைக் கனவில் காணுதல்
பத்ருக் களத்தில் முஸ்லிம்கள் குறைந்த எண்ணிக்கையிலும் எதிரிகள் அதிக எண்ணிக்கையிலும் இருந்தனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கனவில் எதிரிகள் குறைவாகவும் முஸ்லிம்கள் அதிகமாகவும் இருப்பது போல் இறைவன் காட்டினான். முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைக்கும் என்பதை இதன் மூலம் இறைவன் முன்னறிவிப்புச் செய்தான்.
(முஹம்மதே!) உமது கனவில் அவர்களை அல்லாஹ் குறைந்த எண்ணிக்கையினராகக் காட்டியதை எண்ணிப் பாருங்கள்!. அவர்களை அதிக எண்ணிக்கையினராக அல்லாஹ் உமக்குக் காட்டியிருந்தால் தைரியம் இழந்திருப்பீர்கள். இவ்விஷயத்தில் முரண்பட்டிருப்பீர்கள். எனினும் அல்லாஹ் காப்பாற்றினான். உள்ளங்களில் உள்ளவற்றை அவன் அறிந்தவன்.
(அல்குர்ஆன் 8:43)
ஈஸா நபியைக் கனவில் காணுதல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கனவில் கஃபாவைத் தவாப் செய்வது போல கண்டார்கள். அதே கனவில் ஈஸா நபியையும், தஜ்ஜாலையும் கண்டார்கள். அவ்விருவரின் அங்க அடையாளங்களை நமக்கும் விவரித்தார்கள்.
இது புகாரி 3441, 3440, 5902, 6999, 7026, 7128 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஜ்ஜாலையும், ஈஸா நபியையும் எந்த வடிவத்தில் கனவில் கண்டார்களோ அதுவே அவர்களின் வடிவமாக இருந்தது.
ஹிஜ்ரத் பற்றிய கனவு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருக்கும் போது வேறு ஒரு ஊருக்கு இடம் பெயர்வது போல் கண்டார்கள். பேரீச்சை மரம் நிறைந்த அந்த ஊர் யமாமா என்ற ஊராக இருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) விளங்கிக் கொண்டார்கள். ஆனால் அது மதீனாவாக அமைந்து விட்டது.
இது புகாரியில் 3622, 7035 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
கப்பல் படை
தமது சமுதாயத்தில் கடற்படை அமைவது போலவும் அந்தப் படையில் உம்மு ஹராம் என்ற பெண்மணி இடம் பெறுவது போலவும் நபிகள் நாயகம் (ஸல்) கனவு கண்டார்கள். தாம் கண்டவாறு நிறைவேறும் என்று விளக்கினார்கள்.
(புகாரி 2789, 2800, 2878, 2895, 2924, 6282, 7002)
பாலருந்துவது போல கனவு காணுதல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பால் அருந்துவது போலவும் மீதியை உமர் (ரலி) அவர்களிடம் கொடுத்தது போலவும் கனவில் கண்டார்கள். கல்வியே பால் வடிவில் காட்டப்பட்டதாகவும் அவர்கள் விளக்கம் தந்தார்கள்.
(புகாரி 82, 3681, 7006, 7007, 7027, 7032)
பொய் நபிகளைக் கனவில் காணுதல்
இரு கைகளிலும் தங்கக் காப்புகள் அணிவிக்கப்பட்டது போல் என் கனவில் கண்டேன். அது எனக்குச் சுமையாக இருந்தது. அதை ஊதுமாறு அல்லாஹ் எனக்கு அறிவித்தான். நான் ஊதியதும் இரு காப்புகளும் பஞ்சாய்ப் பறந்தன. சன்ஆ, எமன் ஆகிய பதிகளில் தம்மை நபியென வாதிட்ட இரு பொய்யர்களுக்கு ஏற்படும் தோல்வியை அல்லாஹ் இவ்வாறு காட்டுவதாக விளங்கிக் கொண்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.(புகாரி 3621, 4375, 7034, 7037)
உடைந்த வாளைக் காணுதல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாள் உடைந்தது போலவும் பின்னர் உடைந்த வாள் சரியாகி விட்டது போலவும் கனவு கண்டார்கள். அது உஹதுக் களத்தில் முன்னர் ஏற்பட்ட தோல்வியையும் பின்னர் வெற்றி கிடைத்ததையும் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) விளக்கினார்கள்.(புகாரி 3622, 4081, 7041)
உமரின் மாளிகையைக் காணுதல்
மறுமையில் உமர் (ரலி) அவர்களுக்குக் கிடைக்கும் மாளிகையை நபிகள் நாயகம் கனவில் கண்டு அதை உமர் (ரலி) யிடம் கூறினார்கள்.(புகாரி 3242, 3680, 5227, 7023, 7025)
புகாரி 3679-ல் உமர், பிலால், ருமையா ஆகியோரின் மாளிகைகளைக் கனவில் கண்டதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
தலைவிரி கோலத்தில் பெண்ணைக் காணுதல்
மதீனாவில் கொள்ளை நோய் ஏற்பட்ட போது கனவில் ஒரு பெண் தலைவிரி கோலமாக ஜுஹ்ஃபா என்ற இடத்துக்குச் செல்வது போல் கனவு கண்டார்கள். அந்த நோய் மதீனாவை விட்டு ஜுஹ்பா என்ற பகுதிக்குச் சென்றதாக விளக்கினார்கள்.(புகாரி 7038, 7039, 7040)
திருமணத்திற்கு முன்பே மனைவியைக் காணுதல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணத்திற்கு முன்பே கனவில் ஆயிஷா (ரலி) யைக் கண்டு அல்லாஹ் நாடினால் இது நடக்கும் என்றார்கள். அவ்வாறே நடந்தது.(புகாரி 3895, 5078, 5125, 7011, 7012)
இப்படி ஏராளமான கனவுகள் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளன. வாளியில் தண்ணீர் இறைப்பது போன்ற கனவு புகாரி 3664, 7021, 7022, 7475 ஆகிய ஹதீஸ்களில் காணலாம். தேனையும் நெய்யையும் கனவில் கண்டதாக புகாரி 7046வது ஹதீஸில் காணலாம். பசுமையான பேரீச்சம் பழத்தைக் கனவில் கண்டது முஸ்லிம் 4215வது ஹதீஸில் காணலாம். இவை அனைத்தையும் நாம் ஆய்வு செய்தால் நாம் எதைக் கனவில் காணுகிறோமோ அது அப்படியே நிறைவேறலாம். அல்லது நாம் கண்டதற்கு நெருக்கமானதாக அதன் விளக்கம் அமையலாம் என்பதை அறியலாம்.
மேலும் நபிகள் நாயகம் கண்ட அதே கனவை நாமும் கண்டால் அதே பலன் என்று முடிவு செய்யக் கூடாது. கனவு காண்பவரின் காலம், அவர் சந்தித்த பிரச்சினை போன்றவற்றுக்கேற்ப அதன் பலன் இருக்கலாம்.
தலைவிரி கோலமாக ஒரு பெண்ணைப் பார்த்து கொள்ளை நோய் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளங்கினார்கள். கொள்ளை நோய் இல்லாத போது அது போல கனவு கண்டால் அதே விளக்கத்தைக் கொடுக்க முடியாது.
காணுகின்ற மனிதர் சிந்தித்துப் பார்த்தால் இது எதைக் குறிக்கிறது என்று தீர்மானிக்க முடியும்.
எதையுமே தீர்மானிக்க முடியாவிட்டால் பேசாமல் அதை அலட்சியப்படுத்தி விடலாம். அதில் ஏதேனும் செய்தி இருந்தால் நமக்குத் தெளிவாகப் புரியும் வகையில் அதை வேறு கனவின் மூலம் அல்லாஹ் காட்டுவான்.
கனவில் காண்பதை நாம் விளங்கும் போது கனவில் கண்டது அப்படியே வரிக்கு வரி நடக்கும் என்று கருதக் கூடாது. நாம் புரிந்து கொண்டது நடக்காமல் அதற்கு நெருக்கமானதும் நடக்கலாம்.
யூசுப் நபியவர்கள் பதினொரு நட்சத்திரங்கள் தமக்குப் பணிந்ததாகக் கனவு கண்டார்கள். அதற்கு ஏற்ப 11 சகோதரர்களும் அவரைப் பணிந்தார்கள். கனவில் சூரியனும், சந்திரனும் தமக்குப் பணிந்ததாகக் கண்டார்கள். இது அப்படியே நிறைவேறுவது என்றால் யூசுப் நபியின் தாயும், தந்தையும் யூசுப் நபிக்குப் பணிய வேண்டும். ஆனால் தாயையும் தந்தையையும் சிம்மாசனத்தில் அமரச் செய்து அனைவரும் அவ்விருவருக்கும் பணிந்தார்கள் என்று தான் 12:100 வசனம் கூறுகிறது. கனவில் காட்டப்பட்டது ஒரு அளவுக்குத் தான் நடந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஊருக்கு ஹிஜ்ரத் செய்வது போல் கண்டார்கள். அந்த ஊர் யமாமா' என்று நபிகள் நாயகம் (ஸல்) நினைத்தார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் ஹிஜ்ரத் செய்தது மதீனாவாக இருந்தது. இதிலிருந்து கனவில் காட்டப்படும் செய்தி நூற்றுக்கு நூறு என்ற அடிப்படையில் இருக்காது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
பதில் : ரஸ்மின் MISc