புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

dimanche 24 novembre 2013

ஏகத்துவவாதிகளே! சிந்தியுங்கள்!

இறைவன் மனிதனைப் படைத்து அவன் நிம்மதி பெற வேண்டும் என்பதற்காக அவனிலிருந்தே அவனது ஜோடியைப் படைத்தான். அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான். (அல்குர்ஆன் 7:189) 

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்குத் துணை அவசியம் என்பதால் தான் மனிதனைப் படைத்ததோடு மட்டும் நின்று விடாமல் அந்த மனிதரிலிருந்தே அவனது ஜோடியையும் படைத்து, அவர்களில் இருந்து ஆண், பெண் என அதிகமானவர்களை இப்பூவுலகில் பரவச் செய்தான். இப்படிப் பல்கிப் பெருகியிருக்கும் மனிதர்களுக்குப் பல தேவைகளைக் கொடுத்துள்ளான். அந்தத் தேவைகளில் ஒன்று தான் திருமணம். 

எந்த ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்கள் வழி தவறாமல் இருக்க, திருமணம் அவசியமாகும். திருமணம் செய்யாமல் எந்த மனிதராலும் வாழ முடியாது. இன்று நடைமுறையில், நாங்கள் திருமணம் செய்ய மாட்டோம்; திருமணம் செய்யாமலேயே எங்களால் மன இச்சையைக் கட்டுப்படுத்திக் கொண்டு வாழ முடியும் என்று சொன்ன எத்தனையோ பேர்கள் தங்களுடைய மன இச்சையைக் கட்டுப்படுத்த முடியாமல் தவறான வழிக்குச் சென்று, இந்தச் சமுதாயத்தின் முன் தலை குனிந்து நிற்பதைப் பார்க்கிறோம். எனவே ஆணாக இருப்பினும், பெண்ணாக இருப்பினும் அவர்கள் வழி தவறாமல் இருக்க திருமணம் மட்டுமே வடிகாலாகும். 

இஸ்லாம் இலகுவான மார்க்கம். அது இடக்கூடிய கட்டளைகளும் இலகுவானது தான். அது போல் திருமணத்தையும் இலகுவான ஒன்றாகத் தான் கூறுகின்றது. ஆனால் இஸ்லாமியர்களோ இந்தத் திருமணத்தை கடினமானதாக ஆக்கி விட்டார்கள். வீட்டைக் கட்டிப் பார்; கல்யாணத்தைப் பண்ணிப் பார் என்று பழமொழி கூறுவார்கள். அது சரியாகத் தான் உள்ளது. ஒருவன் ஐந்து அல்லது ஆறு லட்ச ரூபாய்க்குள் வீட்டைக் கட்டி முடித்து விட வேண்டும் என்று நினைப்பான். ஆனால் அதையும் தாண்டி சென்று கொண்டே இருக்கும். அது போலத் தான் பெண்ணைப் பெற்றவர்கள், நமது பெண்ணுக்கு இவ்வளவு செலவழித்துத் திருமணம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட ஒரு தொகையை சேமித்து வைத்திருப்பார்கள். 

ஆனால் திருமணம் வந்தவுடன் அவர்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை விட பன்மடங்கு செலவாகும். இதனால் தான் பெண்ணைப் பெற்றவர்கள் ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுக்கும் நிலை உருவாகியுள்ளது. ஏனெனில் இன்று வரதட்சணை அந்த அளவுக்குப் பெருகியுள்ளது. டாக்டர் மாப்பிள்ளை என்றால் அதற்கு ஒரு விலை; எஞ்சினியர் என்றால் அதற்கு ஒரு விலை; சாதாரண மீன் கடையில் மீன் வெட்டுபவனுக்கு இன்றைய விலை ஒன்றரை லட்சம். அது மட்டுமா? நகை போட வேண்டும். சீர் வரிசை செய்ய வேண்டும். 

அதற்குப் பிறகு பெண் கர்ப்பமாகி விட்டால் அவள் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை மருத்துவச் செலவும் செய்து, அந்தக் குழந்தைக்கும் தேவையான அனைத்துச் செலவுகளையும் செய்ய வேண்டும். இப்படி வரதட்சணை என்ற பெயரில் பிச்சை எடுக்கும் ஒரு கூட்டம் இருக்க, வரதட்சணை வாங்க மாட்டோம்; நாங்கள் மஹர் கொடுத்துத் தான் திருமணம் செய்வோம் என்று சபதம் ஏற்ற ஒரு கூட்டம் இருக்கின்றது. அவர்கள் தான் தவ்ஹீதுவாதிகள். ஏகத்துவம் சுடர் விட ஆரம்பித்த ஆரம்ப கால கட்டங்களில் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட மாப்பிள்ளைகளுக்குப் பெண் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது.

ஏனெனில் ஏகத்துவ மாப்பிள்ளைகள் தங்களுக்கு வரதட்சணை தர வேண்டாம்; நகை போட வேண்டாம்; பைக் தர வேண்டாம்; சீர் வரிசைகள் தர வேண்டாம்; ஆயிரக்கணக்கான பேருக்கு விருந்து வைக்க வேண்டாம்; நாங்களே மஹர் கொடுத்து, திருமணச் செலவு எல்லாவற்றையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம்; நீங்கள் பெண் மட்டும் தந்தால் போதும் என்று கூறும் போது, பெண் வீட்டார் சந்தேகக் கண் கொண்டு பார்க்க ஆரம்பித்தார்கள். 

வரதட்சணை கொடுத்து, சீர் வரிசைகள் கொடுத்து பெண்ணைக் கொடுத்தாலே சரியான முறையில் கவனிக்காமல் கொடுமைப்படுத்தும் இந்தக் காலத்தில் எதுவுமே வேண்டாம் என்று சொல்லக் கூடிய இவருக்குப் பெண்ணைக் கொடுத்தால் இவர் நமது பெண்ணை நல்ல முறையில் கவனித்துக் கொள்வாரா? அல்லது இவருக்கு ஏதேனும் குறைகள் இருக்குமோ? என்றெல்லாம் யோசித்து ஏகத்துவ மாப்பிள்ளைகளுக்குப் பெண் தர மறுத்து வந்தார்கள். 

வல்ல நாயனின் மாபெரும் கிருபையால் ஏகத்துவக் கொள்கை வளர்ந்து விட்ட இந்தக் காலகட்டத்தில், ஏகத்துவ மாப்பிள்ளைக்கு நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு பெண் கொடுக்க முன் வருவதை இன்று நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட ஒரு நல்ல காலத்தில் ஏகத்துவ மாப்பிள்ளைகள், தங்களது மாமன் மகள், மாமி மகள், சித்தப்பா மகள், பெரியப்பா மகள் என்று இணை வைக்கும் குடும்பத்தில் சென்று இணை வைக்கும் பெண்களைத் திருமணம் முடிக்கின்றார்கள். பெண்ணின் குடும்பத்தினர் தர்ஹாவாதியாகவும், தரீக்காவாதியாகவும் ஒட்டுமொத்த குடும்பமும் பக்கா ஷிர்க்கில் மூழ்கியுள்ள குடும்பத்தில் போய் இன்று சம்பந்தம் வைக்கிறார்கள். 

இவ்வாறு இணை வைக்கும் பெண்ணைத் திருமணம் செய்யும் ஏகத்துவவாதிகளிடம், "மார்க்கம் தெரிந்த பெண்களை விட்டு விட்டு, இணை வைக்கும் பெண்களை ஏன் திருமணம் செய்கிறீர்கள்?'' என்று கேட்டால், "அந்தப் பெண் திருமணத்திற்குப் பிறகு திருந்தி விடுவாள்; அவளிடம் மார்க்கத்தைச் சொல்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்; இதன் மூலம் அவளது குடும்பத்தாரும் திருந்தி விடலாம்'' என்று தாங்கள் செய்யும் காரியத்தை நியாயப் படுத்துகின்றார்கள். 

எதற்கெடுத்தாலும் குர்ஆன், ஹதீஸ் என்றும், அல்லாஹ்வும் அவன் தூதரும் கட்டளையிட்டபடி தான் செய்வோம் என்றும் கூறக் கூடிய இந்த ஏகத்துவவாதிகள், தான் மணம் முடிக்கப் போகும் மணப் பெண் எப்படியிருக்க வேண்டும் என்று இறைவன் திருமறையில் கூறுவதை சிந்திக்க மறந்து விடுகின்றார்கள். வட்டிப் பொருட்களைச் சாப்பிடுவது, அல்லாஹ் அல்லாத வர்களுக்காக அறுக்கப்பட்டதைச் சாப்பிடுவது, பன்றி இறைச்சியைச் சாப்பிடுவது ஆகியவற்றை எப்படி ஹராம் என்று அல்லாஹ் கூறுகின்றானோ அது போன்று இணை வைக்கும் பெண்களைத் திருமணம் செய்வதும் ஹராம் என்று கூறுகின்றான். 

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! 
இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவு படுத்துகிறான். (அல்குர்ஆன் 2:221) 

இணை வைக்கும் அழகான பெண்ணை விட, அழகு குறைந்த அடிமைப் பெண்ணே சிறந்தவள், அவளையே நீ திருமணம் செய்து கொள் என்று இறைவன் இந்த வசனத்தில் கூறுகின்றான். இந்த வசனத்தின் அடிப்படையில், இணை வைக்கும் பெண்கள் எவ்வளவு தான் அழகானவர்களாக இருந்தாலும் அவர்களைத் திருமணம் செய்வதே கூடாது என்றாகி விடும் போது, இணை வைக்கும் பெண்களைத் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் திருந்தி விடுவார்கள் என்று சொல்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. 

ஏகத்துவவாதிகளே! உங்களின் இந்த வாதத்தின் அடிப்படையில் நீங்கள் மாற்று மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம் அல்லவா? அவ்வாறு மாற்ற மதத்தைச் சார்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் அவளும் இஸ்லாத்திற்கு வரலாம். அவளது குடும்பத்தாரிடம் மார்க்கத்தைச் சொல்வதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும் அல்லவா? ஆனால் இதை நீங்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். அவர்கள் நிராகரிப்பாளர்கள், அவர்களை ஒரு இறை நம்பிக்கையாளன் திருமணம் செய்யக் கூடாது என்பதில் உறுதியாகவே இருக்கின்றீர்கள். 

பெயரளவில் முஸ்லிம் என்று இருந்து கொண்டு, செயலளவில் வரிக்கு வரி, முழத்துக்கு முழம், ஜானுக்கு ஜான் மாற்று மதத்தவர்களின் கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடிய இந்தப் பெண்களுக்கும் இதே அளவுகோலைப் பொருத்திப் பார்க்க மறுக்கின்றார்கள். நாம் ஏன் இவர்களை விட்டுப் பிரிந்தோம்? இவர்கள், முஹய்யித்தீனே என்றும், நாகூர் ஆண்டவரே என்றும் பிரார்த்திக்கின்றார்கள். முருகா என்றழைப்பதும், முஹய்யித்தீனே என்று அழைப்பதும் அல்லாஹ்வின் பார்வையில் ஒன்று தான். அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். 

"அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்'' என்றும் கூறுகின்றனர். "வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்'' என்று கூறுவீராக!  
(அல்குர்ஆன் 10:18) 
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் "அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்கு வார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை'' (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண் பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் >39:3)
மக்கத்துக் காபிர்களிடம், "அல்லாஹ்வுக்கு ஏன் இணை கற்பிக்கின்றீர்கள்? அல்லாஹ் அல்லாதவர்களை ஏன் வணங்குகின்றீர்கள்?'' என்று கேட்டால் அந்த மக்கத்து காபிர்கள், "அவர்கள் எங்களுக்குப் பரிந்துரை செய்வார்கள், எங்களை அல்லாஹ்விடம் நெருக்கி வைப்பார்கள் என்பதற்காகத் தான் நாங்கள் அவர்களை வணங்குகிறோம்'' என்று பதில் கூறுவார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். இப்படிக் கூறிய அந்த மக்கத்துக் காபிர்களிடம், வானத்தைப் படைத்தவன் யார்? பூமியைப் படைத்தவன் யார்? உங்களுக்கு உணவளிப்பவன் யார்? என்று கேட்டால் அல்லாஹ் என்று தான் பதில் கூறினார்கள். "வானங்களையும் பூமியையும் படைத்தவனும் சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். அப்படியாயின் எவ்வாறு அவர்கள் திசை திருப்பப் படுகின்றார்கள்? (அல்குர்ஆன் 29:61) 

"வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி, பூமி செத்த பின் அத்தண்ணீரின் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் "அல்லாஹ்'' என்றே கூறுவார்கள். "அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை. (அல்குர்ஆன் 29:63)
  "பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)'' என்று (முஹம்மதே!) கேட்பீராக! "அல்லாஹ்வுக்கே'' என்று அவர்கள் கூறுவார்கள். "சிந்திக்க மாட்டீர்களா?'' என்று கேட்பீராக! "ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?'' எனக் கேட்பீராக! "அல்லாஹ்வே'' என்று கூறுவார்கள். "அஞ்ச மாட்டீர்களா?'' என்று கேட்பீராக! "பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)'' என்று கேட்பீராக! "அல்லாஹ்வே'' என்று கூறுவார்கள். "எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?'' என்று கேட்பீராக! (அல்குர்ஆன் 23:84-89) 
இந்த வசனங்களைச் சற்றுச் சிந்தித்துப் பார்த்தால் அல்லாஹ் என்ற ஒருவன் இருக்கின்றான், அவன் தான் படைக்கக் கூடியவன், அழிக்கக் கூடியவன், உணவளிக்கக் கூடியவன் என்று மக்கத்துக் காபிர்கள் நம்பியிருந்தார்கள் என்பது விளங்கும். அப்படியிருந்தும் அவர்களை இணை வைப்பாளர்கள் என்று இறைவன் கூறுகின்றான் என்றால் அவர்கள் தாங்கள் வணங்கக் கூடிய தெய்வங்கள், தங்களை அல்லாஹ்விடம் நெருக்கி வைக்கும் என்று சொன்னதால் தான். 

இன்று முஸ்லிம் என்று பெயர் வைத்துக் கொண்டு, தங்களைப் போன்ற மனிதர்களையும் மரங்களையும் வணங்கக்கூடியவர்களிடம், "நீங்கள் ஏன் தர்ஹாவுக்குச் செல்கின்றீர்கள்? நம்மைப் போன்ற மனிதர்களை ஏன் அல்லாஹ்வுக்கு இணையாக்கி அவர்களிடம் பிரார்த்தனை செய்கிறீர்கள்?'' என்று கேட்டால், அவர்கள் என்ன பதில் கூறுகின்றார்கள்? "நாங்கள் என்ன அந்த அவ்லியாக்களிடம் போய் எங்களுக்குப் பிள்ளைப் பாக்கியத்தைத் தாருங்கள் என்றும், எங்கள் கஷ்டத்தைத் தீர்த்து வையுங்கள் என்றுமா கேட்கிறோம்? இல்லையே! அவர்கள் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள், அதனால் அல்லாஹ்விடம் அவர்கள் பரிந்துரை செய்வார்கள் என்று தானே சொல்கிறோம்'' என்று பதில் கூறுகின்றார்கள். இப்படிச் சொல்லக் கூடிய இவர்களுக்கும் மக்கத்து முஷ்ரிக்குகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகின்றது? இன்னும் சொல்லப்போனால் இன்றைய தர்காவாதிகள் அன்றைய மக்கத்து முஷ்ரிக்குகளை விட மிகவும் மோசமான கொள்கை கொண்டவர்கள். 

ஹெச். குர்ஷித் பானு பி.ஐ.எஸ்.சி. ஏகத்துவம் 2006