இஸ்லாத்தின் பெயரால் நாம் எந்தக் காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் அக்காரியம் திருக்குர்ஆனிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் உள்ளபடி அமைந்திருக்க வேண்டும். திருக்குர்ஆனிலும் நபிவழியிலும் இல்லாத காரியங்கள் இஸ்லாத்தின் காரியங்களாக இருக்க முடியாது.
தொழுகை உள்ளிட்ட அனைத்து வணக்க முறைகளையும் நமக்குக் கற்றுத் தருவதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் அனுப்பினான். அவர்களும் தமது பணியில் எந்தக் குறைவும் வைக்காமல் முழுமையாக நமக்குச் சொல்த் தந்தார்கள். அவர்கள் உயிருடன் வாழும் போதே இம்மார்க்கத்தை இறைவன் முழுமைப்படுத்தி விட்டான்.
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்.(அல்குர்ஆன் 5:3)
'நமது கட்டளையில்லாமல் எந்தச் செயலையேனும் யாரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.அறிவிப்பவர்: ஆயிஷா (ர)நூல்: முஸ்ம் (3243)
எனவே நமது தொழுகை முறையும் நபிகள் நாயகம் (ஸல்) காட்டித் தந்த வழியில் மட்டுமே அமைய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் செய்தார்கள் என்பது தெளிவாகத் தெரியும் போது அதற்கு மாற்றமாக எவ்வளவு பெரிய மேதைகள், இமாம்கள் கூறினாலும் அவற்றை நாம் நிராகரித்து விட வேண்டும்.
மாக் பின் ஹுவைரிஸ் (ர) தலைமையில் வெளியூர் இளைஞர்கள் இஸ்லாத்தை ஏற்க வந்தனர். அவர்களை 20 நாட்கள் தம்முடன் தங்க வைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவ்விளைஞர்கள் திரும்பிச் செல்லும் போது,
'என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்' எனக் கூறி அனுப்பினார்கள்.நூல்: புகாரி 631, 6008, 7246
நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழியில் மட்டும் தான் நமது தொழுகை அமைந்திருக்க வேண்டும் என்பதை இதிருந்து அறியலாம்.
புனித மிக்க ரமலான் மாதத்தில் மக்கள் பேரார்வத்துடன் தராவீஹ் தொழுகை' என்ற பெயரில் இருபது ரக்அத் தொழுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு ரமலான் மாதத்திலும் தமிழகத்தின் பல ஊர்களில், இத்தொழுகை குறித்த கருத்து வேறுபாடு காரணமாக முஸ்லிம்கள் மத்தியில் சண்டைகள் நடந்து, காவல் நிலையங்களில் வழக்குகளும் பதிவாகும் வேதனையளிக்கும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
இஸ்லாத்தின் உண்மை நிலையை குர்ஆன் மற்றும் நபிவழியில் தக்க ஆதாரங்களுடன் அறிந்து கொண்டால் இந்த வேண்டாத நிகழ்வுகளைத் தவிர்க்க இயலும்.
தராவீஹ் என்ற சொல்லே இல்லை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுத பல்வேறு தொழுகைகளும், அவற்றுக்கான பெயர்களும் ஹதீஸ் நூல்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
இரவில் தொழப்படும் தொழுகைக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
1. ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை) 2. கியாமுல் லைல் (இரவில் நிற்குதல்) 3. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை) 4. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும் தொழுகை) ஆகிய பெயர்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.
ஆனால் தாரவீஹ் என்ற சொல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியதாகவோ, தராவீஹ் என்ற தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுததாகவோ ஹதீஸ் நூற்களில் குறிப்பிடப்படவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகையை நாம் ஆய்வு செய்தால் ரமளானிலும் ரமளான் அல்லாத காலங்களிலும் ஒரே மாதிரியாகத் தான் தொழுதுள்ளனர் என்பதை அறியலாம்.
மற்ற மாதங்களில் இரவுத் தொழுகை தொழுவதற்கு மக்களுக்கு அவர்கள் ஆர்வமூட்டியதை விட ரமளானில் அதிக ஆர்வமூட்டியுள்ளனர். தஹஜ்ஜுத் எனும் இரவுத் தொழுகையை மற்ற நாட்களில் தொழாதவர்கள் ரமளானிலாவது தொழுது நன்மையை அடைந்து கொள்ள வேண்டும் என்ற அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முக்கியத்துவம் அளித்துள்ளனர்.
ரமளானில் யார் நின்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது நபிமொழி.அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)நூல்: புகாரீ 37, 2008, 2009
'ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?' என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'ரமாளானிலும், மற்ற மாதங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினோரு ரக்அத்களுக்கு மேல் அதிகமாக்கியதில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும், நீளத்தைப் பற்றியும் கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும் நீளத்தைப் பற்றியும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்' என்று விளக்கம் அளித்தார்கள். அறிவிப்பவர்: அபூ ஸலமா (ரலி) நூல்: புகாரீ 1147, 2013, 3569
ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை பற்றி அபூ ஸலமா கேள்வி கேட்கிறார். அவரது கேள்வியே ரமளானில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்பது தான். அவர் ரமளான் தொழுகை பற்றியே கேள்வி கேட்டிருந்தும் ஆயிஷா (ரலி) அவர்கள், ரமளானிலும் ரமளான் அல்லாத மாதங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்களுக்கு மேல் தொழுததில்லை' என்று விடையளிக்கிறார்கள்.
எனவே ரமளானில் தொழுவதும் தஹஜ்ஜுத் தொழுகை தான்.
ரமளானுக்குத் தனித் தொழுகை இல்லை. மற்ற மாதங்களில் தொழும் அதே தஹஜ்ஜுத் தொழுகை தான் ரமளானிலும் உள்ளது என்று தெள்ளத் தெளிவாக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகையை நன்கு அறிந்த அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களே அறிவித்து விட்டனர்.
ரமளானில் சிறப்புத் தொழுகை இல்லை என்று ஆயிஷா (ரலி) தெரிவித்த பின் தராவீஹ் தொழுகையை எங்கிருந்து கண்டுபிடித்தார்கள்?
தஹஜ்ஜத் வேறு, தராவீஹ் வேறு என்ற வாதம்
ரமளானிலும் மற்ற மாதங்களிலும் ஒரே தொழுகை தான் என்று நாம் மேற்கண்ட ஆதாரத்தையும், ரக்அத்களின் எண்ணிக்கை என்ற தலைப்பில் எடுத்துக் காட்டவுள்ள ஆதாரங்களையும் கண்ட பின் உண்மையை ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர். தராவீஹ் வேறு, தஹஜ்ஜத் வேறு என்ற விசித்திரமான வாதத்தை முன் வைக்கின்றனர்.
தஹஜ்ஜுத் என்பது எல்லா நாட்களும் தொழ வேண்டிய தொழுகையின் பெயர். ரமளான் மாதத்தில் தஹஜ்ஜுத் தொழுகையுடன் தராவீஹ் என்ற மற்றொரு தொழுகை உண்டு; எனவே தஹஜ்ஜுத்துக்கான ஆதாரத்தை தராவீஹ் தொழுகைக்கு ஆதாரமாகக் காட்ட வேண்டாம் எனவும் அவர்கள் வாதிடுகின்றனர்.
எனவே இது பற்றியும் விரிவாக நாம் விளக்க வேண்டியுள்ளது.
தஹஜ்ஜுத் வேறு, தராவீஹ் வேறு என்பதற்கு ஆதாரம் இருந்தால் அதை முதலில் ஏற்பவர்களாக நாம் இருப்போம்.
தஹஜ்ஜுத் வேறு, தராவீஹ் வேறு என்று வேறுபடுத்திக் கூறக் கூடியவர்கள் தராவீஹ் தொழுகைக்கான ஆதாரத்தை எடுத்துக் காட்ட வேண்டும். உலகம் அழியும் வரை இத்தகைய ஆதாரத்தை அவர்களால் எடுத்துக் காட்டவே இயலாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுது விட்டு ரமளான் மாதத்தில் மேலும் 20 ரக்அத்கள் தொழுதார்கள் என்று ஆதாரத்தைக் காட்டாத வரை இந்த வாதத்தை அறிவுடையோர் ஏற்க மாட்டார்கள்.
நாங்கள் ரமளான் மாதத்தின் இருபத்தி மூன்றாம் இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஐந்தாம் இரவில் இரவில் பாதி வரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஏழாம் இரவில் சஹர் உணவு தவறிவிடும் என்று நினைக்கும் அளவுக்குத் தொழுதோம்.அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)நூல்: நஸயீ 1588
இதே கருத்து அபூதாவூத் 1167, இப்னுமாஜா 1317, அஹ்மத் 20450 ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரவில் தொழ ஆரம்பித்து, ஸஹர் கடைசி வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தொழுகையைத் தான் தொழுதுள்ளனர் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
இரவுத் தொழுகையின் நேரம்
இரவுத் தொழுகையின் நேரம் குறித்துத் தவறான கருத்து சிலரிடம் உள்ளதால் தராவீஹ், தஹஜ்ஜுத் என்று இரண்டு தொழுகைகள் உள்ளதாக நினைக்கின்றனர்.
தூங்கி எழுந்து பாதி இரவுக்குப் பின்னர் தொழுவது தஹஜ்ஜுத் தொழுகை தூங்குவதற்கு முன் தொழுவது தராவீஹ் தொழுகை என்று எவ்வித ஆதாரமும் இன்றி நம்புவது தான் குழப்பத்திற்கு முக்கியக் காரணம்.
ரமளான் மாதத்தின் இருபத்தி மூன்றாம் இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை நாங்கள் தொழுதோம். பின்னர் இருபத்தி ஐந்தாம் இரவில் இரவில் பாதி வரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஏழாம் இரவில் சஹர் உணவு தவறி விடும் என்று நினைக்கும் அளவுக்குத் தொழுதோம்.அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)நூல்: நஸயீ 1588
ரமளான் மாதத்தில் இஷா முதல் சுப்ஹ் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தொழுகை தான் தொழுதுள்ளனர் என்று மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ் ஒன்றே இவர்களின் நம்பிக்கை தவறு என்பதற்குப் போதுமான சான்று.
இரவுத் தொழுகையை இரவு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் தொழலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லா நேரங்களிலும் தொழுதுள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷா தொழுதது முதல் பஜ்ரு வரை பதினோரு ரக்அத் தொழுவார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: முஸ்லிம் 1216
இரவுத் தொழுகையை இஷாவிலிருந்து சுபுஹ் வரை தொழலாம் என்பதற்கு இது சான்றாக அமைந்துள்ளது.
எனது சிறிய தாயாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா (ரலி) அவர்கள் வீட்டில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருக்கும் என்பதைக் காண்பதற்காக அவர்களுடன் ஓர் இரவு தங்கினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மனைவியுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டுப் பின்னர் உறங்கினார்கள். இரவின் கடைசி மூன்றாம் பகுதி ஆனதும் எழுந்து அமர்ந்தார்கள். வானத்தைப் பார்த்து வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன (3:190) என்ற வசனத்தை ஓதினார்கள். பின்னர் எழுந்து உளூச் செய்தார்கள். பல் துலக்கினார்கள். பின்னர் பதினொரு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் பிலால் (சுப்ஹ்) தொழுகைக்கு பாங்கு சொன்னார். இரண்டு ரக்அத் தொழுதுவிட்டுப் புறப்பட்டு மக்களுக்கு சுபுஹ் தொழுவித்தார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)நூல்: புகாரி 7452
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவின் கடைசி நேரத்தில் எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)நூல்: முஸ்லிம் 376
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை தொழுது முடிப்பதற்கும் சுபுஹ் தொழுகைக்கு பாங்கு சொல்வதற்கும் சரியாக இருந்தது என்பதையும் இரவின் கடைசி நேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை தொழுதுள்ளனர் என்பதையும் இதிலிருந்து அறிகிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதி இரவான போது எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)நூல்: புகாரீ 183
ரக்அத்களின் எண்ணிக்கை
ரமளான் மாதத்திலும் மற்ற மாதங்களிலும் தொழ வேண்டிய இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள் என்பதில் பல்வேறு அறிவிப்புகள் உள்ளன. இந்த அறிவிப்புக்களில் ஆதாரப்பூர்வமான எதையும் நாம் நடைமுறைப்படுத்தலாம்.
4+5=9 ரக்அத்கள்
எனது சிறிய தாயாரும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் ஓரிறவு தங்கினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுது விட்டு தமது இல்லம் வந்தார்கள். நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் உறங்கினார்கள். பின்னர் எழுந்து சிறுவன் தூங்கி விட்டானா? என்று கூறி (தொழுகைக்காக) நின்றார்கள். நானும் எழுந்து அவர்களின் இடது புறம் நின்றேன். என்னைத் தமது வலது புறத்திற்கு மாற்றினார்கள். அப்போது ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களின் குறட்டைச் சத்தம் கேட்கும் அளவுக்குத் தூங்கினார்கள். பின்னர் (பஜ்ரு) தொழுகைக்காகப் புறப்பட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 117, 697
இஷாவுக்குப் பின் நான்கு ரக்அத்களும் தூங்கி எழுந்த பின் ஐந்து ரக்அத்களும் பின்னர் இரண்டு ரக்அத்களும் ஆக மொத்தம் 11 ரக்அத்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுததாக மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது.
இதில் கடைசியாகக் குறிப்பிடப்படும் இரண்டு ரக்அத், இரவுத் தொழுகை கணக்கில் அடங்காது என்பதை இரண்டு காரணங்களின் அடிப்படையில் நாம் முடிவு செய்யலாம்.
இரவுத் தொழுகையில் கடைசியாக வித்ரு தொழுகையை ஆக்கிக் கொள்ளுங்கள் என்பது நபிமொழி.அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல்: புகாரி 472, 998
வித்ரு தொழுகை என்பது ஒற்றைப் படையாகத் தொழும் தொழுகையாகும். மேற்கண்ட ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐந்து ரக்அத்கள் தொழுததாகக் கூறப்பட்டுள்ளது. எனவே அது வித்ரு தொழுகை தவிர வேறில்லை. வித்ரு தான் கடைசித் தொழுகை என்றால் அதன் பிறகு தொழுத இரண்டு ரக்அத்கள் இரவுத் தொழுகையாக இருக்காது. மாறாக ஃபஜ்ரு தொழுகையின் முன் சுன்னத்தாகத் தான் இருக்க முடியும். இரண்டு ரக்அத் தொழுது விட்டுத் தூங்கிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பஜ்ரு தொழுகைக்குத் தான் புறப்பட்டார்கள் என்று மேற்கண்ட ஹதீஸிலேயே கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பஜ்ருடைய முன் சுன்னத்தை விட்டதேயில்லை என்று ஹதீஸ் உள்ளதால் இந்த இரண்டு ரக்அத் பஜ்ருடைய முன் சுன்னத்தாகத் தான் இருக்க முடியும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பஜ்ருடைய பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையே இரண்டு ரக்அத் தொழுவதை அறவே விட்டதில்லை.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: புகாரி 1159, 1182, 1163
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பஜ்ருடைய முன் சுன்னத் தொழுது விட்டுச் சற்று நேரம் தூங்குவார்கள். அதன் பின்னர் பஜ்ரு தொழ வைக்கச் செல்வார்கள் என்று பல்வேறு ஹதீஸ்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
பஜ்ரு நேரம் தெளிவாகி பாங்கு சொல்பவர் பஜ்ருடைய பாங்கு சொன்னவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து பஜ்ருக்கு முன் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பின்னர் இகாமத் சொல்வதற்காக பாங்கு சொல்பவர் வரும் வரை வலது பக்கம் சாய்ந்து படுத்துக் கொள்வார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 626, 994, 1123, 1160, 6310
எனவே மேற்கண்ட ஹதீஸில் கூறப்படும் இரண்டு ரக்அத்கள் பஜ்ரின் முன் சுன்னத் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையாக நான்கு ரக்அத்களும் ஐந்து ரக்அத்களும் தொழுதுள்ளனர் என்பது தெளிவாகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள் என்று புகாரி 937, 1169 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. அந்த இரண்டு ரக்அத்களை வீட்டில் தான் தொழுவார்கள் என்று புகாரி 1173, 1181 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் வீட்டிற்கு வந்தவுடன் நான்கு ரக்அத்கள் தொழுதார்கள் என்று மேற்கண்ட ஹதீஸில் இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்கள். அதாவது இஷாவின் பின் சுன்னத்தை அவர்கள் தொழாமல் நான்கு ரக்அத்கள் தொழுதார்கள் என்பது தெரிகிறது.
எனவே மேற்கண்ட நபிவழியை நடைமுறைப்படுத்த விரும்புவோர் இஷாவின் பின் சுன்னத் இரண்டு ரக்அத் தொழாமல் அதற்குப் பதிலாக நான்கு ரக்அத் மட்டும் தொழுது விட்டு, தூங்கி எழுந்து ஐந்து ரக்அத் வித்ரு தொழுதால் போதும். இவ்வாறு செய்பவர் தஹஜ்ஜுத் எனும் இரவுத் தொழுகையை நிறைவேற்றியவராவார். இதுவும் நபி வழி தான்.
ஏழு அல்லது ஒன்பது ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், 'ஃபஜ்ருடைய சுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)' என்று விடையளித்தார்கள்.அறிவிப்பவர்: மஸ்ரூக்,
நூல்: புகாரீ 1139
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடமையல்லாத தொழுகைகள் பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகைக்கு முன் என் வீட்டில் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். பின்னர் புறப்பட்டு லுஹர் தொழுகை நடத்துவார்கள். பின்னர் வீட்டிற்கு வந்து இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். மக்களுக்கு மஃரிப் தொழுகை நடத்தி விட்டு வீட்டிற்கு வந்து இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். மக்களுக்கு இஷாத் தொழுகை நடத்திவிட்டு எனது வீட்டிற்கு வந்து இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். இரவில் வித்ரை சேர்த்து ஒன்பது ரக்அத்கள் தொழுவார்கள். இரவில் நீண்ட நேரம் உட்கார்ந்தும் தொழுவார்கள். அவர்கள் நின்று தொழும் போது நின்ற நிலையில் இருந்தே ருகூவுக்கும் ஸஜ்தாவுக்கும் செல்வார்கள். உட்கார்ந்து தொழுதால் உட்கார்ந்த நிலையிலிருந்தே ருகூவு, ஸஜ்தா செய்வார்கள். பஜ்ரு நேரம் வந்ததும் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்' என்று விளக்கம் அளித்தார்கள்.அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஷகீக்
நூல் முஸ்லிம் 1201
வித்ரையும் சேர்த்து ஒன்பது ரக்அத்கள் என்று மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. வித்ரு எத்தனை? வித்ரு அல்லாத தொழுகை எத்தனை என்று பிரித்துக் கூறப்படவில்லை.
8+1 அல்லது 6+3 அல்லது 4+5 என்று தொழுதிருக்கலாம். அது போல ஏழு ரக்அத்கள் தொழும் போது 6+1 அல்லது 4+3 என்றும் தொழுதிருக்கலாம். வித்ரையும் சேர்த்து ஏழு அல்லது ஒன்பது எண்ணிக்கை வரும் வகையில் தொழுதால் அவர் நபிவழியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றியவர் தான்.
8+3 ரக்அத்கள்
'ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?' என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'ரமாளானிலும், மற்ற மாதங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினோரு ரக்அத்களுக்கு மேல் அதிகமாக்கியதில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும், நீளத்தைப் பற்றியும் கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும் நீளத்தைப் பற்றியும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்' என்று விளக்கம் அளித்தார்கள். அறிவிப்பவர்: அபூ ஸலமா (ரலி)
நூல்: புகாரீ 1147, 2013, 3569
வித்ரு தவிர எட்டு ரக்அத்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள் என்பதை மேற்கண்ட நபிவழி மூலம் அறிந்து கொள்ளலாம்.
(நான்கு, நான்காகத் தொழ வேண்டுமா? இரண்டிரண்டாகத் தொழ வேண்டுமா? என்ற சந்தேகம் ஏற்படலாம். இது மற்றோர் இடத்தில் விளக்கப்பட்டுள்ளது)
வித்ரையும் சேர்த்து 11 ரக்அத்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினோரு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர். இதுவே அவர்களின் இரவுத் தொழுகையாக இருந்தது. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 994, 4569, 1123, 1140, 6310
10 ரக்அத்கள் மட்டும் தொழுதல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுதார்கள். பின்னர் எட்டு ரக்அத்களும், உட்கார்ந்து இரண்டு ரக்அத்களும் தொழுதார்கள். (பஜ்ருடைய) பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையே இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இத்தொழுகையை அவர்கள் ஒரு போதும் விட்டதில்லை. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1159
இரவுத் தொழுகை பற்றிய அறிவிப்புகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வித்ரு தொழாமல் இருந்ததாகக் கூறப்படவில்லை. ஆனால் இந்த அறிவிப்பில் ஒற்றைப்படையாக அவர்கள் எந்தத் தொழுகையும் தொழுததாகக் கூறப்படவில்லை. சில சமயங்களில் இப்படி ஒருவர் தொழுதாலும் அவர் நபிவழியில் தொழுதவராவார்.
12 ரக்அத்துடன் வித்ரும் தொழுதல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியும் எனது சிறிய தாயாருமான மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் ஒரு இரவு தங்கினேன்.......நபிகள் நாயகம் (ஸல்) அழகிய முறையில் உளூச் செய்து தொழலானார்கள். அவர்கள் செய்தது போல் நானும் செய்து அவர்களின் விலாப் புறத்தில் நின்றேன். அவர்கள் தமது வலது கையை என் தலையில் வைத்து எனது வலது காதைப் பிடித்துத் திருப்பினார்கள். (1) இரண்டு ரக்அத்கள் (2) பின்னர் இரண்டு ரக்அத்கள் (3) பின்னர் இரண்டு ரக்அத்கள் (4) பின்னர் இரண்டு ரக்அத்கள் (5) பின்னர் இரண்டு ரக்அத்கள் (6) பின்னர் இரண்டு ரக்அத்கள். பின்னர் வித்ரு தொழுதார்கள்....அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 183, 992, 1198, 4571, 4572
இரண்டிரண்டாக ஆறு தடவை தொழுது விட்டுப் பின்பு வித்ரு தொழுதார்கள் என்று மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. வித்ரின் எண்ணிக்கை இங்கே கூறப்படவில்லை. குறைந்த பட்ச வித்ரு ஒரு ரக்அத் என்று வைத்துக் கொண்டால் பதிமூன்று ரக்அத்கள் தொழுததாக எடுத்துக் கொள்ளலாம். அடுத்து வரும் தலைப்பில் வித்ரு ஒரு ரக்அத் என்றே கூறப்படுவதால் அதற்கேற்ப இதையும் புரிந்து கொள்வது நல்லது.
வித்ரையும் சேர்த்து 13 ரக்அத்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகையை நான் கவனித்திருக்கிறேன். அவர்கள் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் நீள நீளமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் அதை விட நீளம் குறைந்த இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் அதை விட நீளம் குறைந்த இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் அதை விட நீளம் குறைந்த இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் அதை விட நீளம் குறைந்த இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் வித்ரு தொழுதார்கள். ஆக மொத்தம் பதிமூன்று ரக்அத்கள்.அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹைனீ (ரலி)நூல்: முஸ்லிம் 1284
நபி (ஸல்) அவர்கள் இரவில் 13 ரக்அத்கள் தொழுதார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)நூல்: புகாரீ 1138
இரண்டிரண்டாக ஆறு தடவையும் ஒரு ரக்அத் வித்ரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுள்ளனர். இவ்வாறு தொழுவதும் நபிவழி தான்.
5 ரக்அத் வித்ருடன் 13 ரக்அத்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். ஐந்தாவது ரக்அத்தில் தவிர உட்கார மாட்டார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 1217
இரவுத் தொழுகை எட்டு ரக்அத்துடன் வித்ரு ஐந்து ரக்அத்கள் தொழலாம். ஐந்து ரக்அத் வித்ரு தொழுதால் முதல் நான்கு ரக்அத்தில் அத்தஹிய்யாத் ஓதுவதற்காக உட்காரக் கூடாது. கடைசி ரக்அத்தில் மட்டுமே உட்கார வேண்டும். இப்படித் தொழுவதும் நபிவழி தான்.
ஒரு ரக்அத் வித்ருடன் 11 ரக்அத்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் பத்து ரக்அத்கள் தொழுவார்கள். ஒரு ரக்அத் வித்ரு தொழுவார்கள். பஜ்ருடைய முன் சுன்னத் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். ஆக மொத்தம் பதிமூன்று ரக்அத்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1222
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள். தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காக) தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும் வரை வலப்பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர்) வந்ததும் (எழுந்து) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஸுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: முஸ்லிம் 1215
வித்ரு தொழுகையின் ரக்அத்கள்
1, 3, 5 ரக்அத்கள்
'வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180
7 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்கள் ஐந்து அல்லது ஏழு ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அவற்றுக்கிடையே ஸலாமைக் கொண்டோ, அல்லது பேச்சைக் கொண்டோ பிரிக்க மாட்டார்கள்.அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)நூல்கள்: நஸயீ 1695, இப்னுமாஜா 1182, அஹ்மத் 25281
வித்ரு தொழும் முறை
நபி (ஸல்) அவர்கள் ஐந்து அல்லது ஏழு ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அவற்றுக்கிடையே ஸலாமைக் கொண்டோ, அல்லது பேச்சைக் கொண்டோ பிரிக்க மாட்டார்கள்.அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூல்கள்: நஸயீ 1695, இப்னுமாஜா 1182, அஹ்மத் 25281
நபி (ஸல்) அவர்கள் ஐந்து ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அதன் கடைசியில் தவிர மற்ற ரக்அத்களில் அமர மாட்டார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: நஸயீ 1698
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உடல் கனத்த போது ஏழு ரக்அத்கள் தொழுதார்கள். அதில் அதன் கடைசி ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்துகளில் உட்காரவில்லை.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: நஸயீ 1699
நபி (ஸல்) அவர்கள் வயதாகி பலவீனம் அடைந்த போது ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள். அதில் ஆறாவது ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்களில் உட்காரவில்லை. பின்னர் எழுவார்கள். ஸலாம் கொடுக்க மாட்டார்கள். பின்னர் ஏழாவது ரக்அத்தைத் தொழுவார்கள். பின்னர் ஸலாம் கூறுவார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் அமர்ந்து தொழுவார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: நஸயீ 1700
நபிவழி மீறப்படுதல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை குறித்து மேலே நாம் எடுத்துக் காட்டியவை அனைத்தும் ஆதாரப்பூர்வமானவையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை குறித்து இவ்வளவு தெளிவான சான்றுகள் இருந்தும் ஒவ்வொரு கால கட்டத்திலும் இதற்கு மாற்றமான எண்ணிக்கையில் பலரும் தம் இஷ்டத்திற்குத் தொழுதுள்ளனர். மதிக்கத்தக்க அறிஞர்கள் கூட நபிவழிக்கு மாற்றமாகத் தொழுதிருப்பதும் கருத்துக் கூறியிருப்பதும் நமக்கு வியப்பாகவே உள்ளது.
இது குறித்து துஹ்பதுல் அஹ்வதி எனும் நூலில் (பாகம்: 3, பக்கம்: 438) பின்வரும் தகவல் திரட்டித் தரப்பட்டுள்ளது.
ஆதாரமற்ற பல்வேறு எண்ணிக்கைகள்
வித்ரையும் சேர்த்து 41 ரக்அத்கள் என்று சில அறிஞர்கள் கருதியுள்ளனர். இது பற்றி ஆதாரப்பூர்வமான, பலவீனமான ஒரு ஹதீஸைக் கூட நான் காணவில்லை. அபூ ஹலீமா என்பவர் மக்களுக்கு ரமளான் மாதத்தில் 41 ரக்அத்கள் தொழ வைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வத் பின் யஸீத் என்பார் நாற்பது ரக்அத்களும் வித்ரு ஏழு ரக்அத்களும் தொழ வைப்பார். மதீனாவாசிகள் இதைச் செயல்படுத்தியுள்ளனர்.
'மக்கள் 38 ரக்அத்கள் தொழ வேண்டும். பின்னர் இமாமும் மக்களும் ஸலாம் கொடுத்து விட்டு ஒரு ரக்அத் வித்ரு தொழ வேண்டும். ஹிஜ்ரி 100 முதல் இன்று வரை மதீனாவாசிகளின் நடைமுறை இவ்வாறே இருந்து வருகிறது. இதையே நான் விரும்புகிறேன்' என்று மாலிக் இமாம் கூறுகிறார்.
'மூன்று ரக்அத் வித்ருடன் மக்கள் 39 ரக்அத்கள் தொழுததை நான் பார்த்துள்ளேன்' என்று நாபிவு கூறுகிறார்.
ஸராரா பின் அவ்ஃபா என்பார் கடைசிப் பத்து நாட்களில் 34 ரக்அத்கள் தொழுவித்தார். முதல் 20 நாட்களில் 28 ரக்அத்கள் தொழுதார்.
24 ரக்அத்கள் என்று யஸீத் பின் ஜுபைர் கூறுகிறார்.
இரவுத் தொழுகை ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு எண்ணிக்கையில் தொழப்பட்டு வந்தன. மேற்கூறப்பட்ட எதுவுமே நபிவழியை ஆதாரமாகக் கொண்டதல்ல.
20 ரக்அத்கள் பற்றிய ஆய்வு
இரவுத் தொழுகை 20 ரக்அத்கள் என்பதை ஹனபி மத்ஹபைச் சேர்ந்த பெரும்பாலான அறிஞர்கள் ஏற்றுக் கொண்டதால் நமது நாட்டிலும் பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளிலும் 20 ரக்அத்கள் என்பது வழக்கத்துக்கு வந்து விட்டது.
இரவுத் தொழுகை 20 ரக்அத்கள் என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல்லோ, செயலோ, அங்கீகாரமோ ஆதாரமாக உள்ளதா என்பதை முதலில் ஆராய்வோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வித்ரைத் தவிர 20 ரக்அத்களை ரமளானில் தொழுபவர்களாக இருந்தனர் என்ற கருத்தில் கீழ்க்காணும் சில ஹதீஸ்கள் காணப்படுகின்றன.
நூல்: தப்ரானியின் கபீர் 10/86
பைஹகீ 2/496
நூல்: தப்ரானியின் அவ்ஸத் 2/309
நூல்: தப்ரானியின் அவ்ஸத் 12/176
நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா 2/286
நூல்: முஸ்னத் அப்து பின் ஹமீத் 2/271
மேற்கண்ட ஆறு அறிவிப்புகளையும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக அறிவிக்கும் அடுத்த அறிவிப்பாளர் மிக்ஸம் என்பார்.
மிக்ஸம் கூறியதாக அறிவிக்கும் அடுத்த அறிவிப்பாளர் ஹகம் என்பார்.
ஹகம் கூறியதாக அறிவிக்கும் அடுத்த அறிவிப்பாளர் உஸ்மானின் மகன் இப்றாஹீம் ஆவார். இவர் அபூஷைபா என்றும் கூறப்படுவார்.
மேற்கண்ட அனைத்து நூல்களிலும் ஹகம் என்பார் கூறியதாக இவர் (அபூஷைபா) தான் அறிவிக்கிறார். ஹதீஸ் கலை அறிஞர்கள் இவரைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
ஹாபிழ் ஸைலயீ அவர்கள் தமது நஸ்புர் ராயா என்ற நூலில் 'உஸ்மானின் மகன் இப்றாஹீம் என்பார் பலவீனமானவர் என்று அறிஞர்கள் ஏக மனதாக முடிவு செய்துள்ளனர்; இப்னு அதி அவர்கள் தமது அல்காமில் என்ற நூலில் இவரைப் பலவீனமானவர் என்று அறிவித்துள்ளார்' என்று குறிப்பிடுகிறார். இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ள இமாம் பைஹகீ அவர்கள் இந்த ஹதீஸைத் தொடர்ந்து, 'அபூஷைபா எனப்படும் இப்றாஹீம் பின் உஸ்மான் என்பவர் மட்டுமே இதைத் தனித்து அறிவிக்கிறார்; இவர் பலவீனமானவர்' என்று குறிப்பிடுகிறார்.
இவரைப் பற்றி அறிஞர்கள் செய்த விமர்சனத்தை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் பின்வருமாறு தொகுத்துக் கூறுகிறார்.
இமாம் அஹ்மத் பின் ஹம்பல், யஹ்யா பின் மயீன், அபூதாவூத் ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இவர் நம்பகமானவர் அல்ல என்றும் யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார். இவரைப் பற்றி யாரும் பேசுவதே இல்லை என்று புகாரி கூறுகிறார். இவர் நிராகரிக்கப்படும் ஹதீஸ்களை அறிவிப்பவர் என்று திர்மிதி கூறுகிறார். பொய் சொல்பவர் என்று சந்தேகிக்கப்படுவதால் இவரை விட்டு விட வேண்டும் என்று நஸயீ, தவ்லாபி கூறுகின்றனர். இவர் பலவீனமானவர். இவரைப் பற்றி யாரும் பேசுவதில்லை. இவருடைய ஹதீஸை விட்டு விட்டனர் என்று அபூஹாத்தம் கூறுகிறார். இவர் மதிக்கப்பட வேண்டியவர் அல்ல என்று ஜவ்ஸஜானி கூறுகிறார். இவரது ஹதீஸ்களைப் பதிவு செய்யக் கூடாது என்று ஸாலிஹ் ஜஸ்ரா கூறுகிறார். இவர் ஹகம் என்பவர் வழியாக நிராகரிக்கத்தக்க பல ஹதீஸ்களை அறிவித்துள்ளார் எனவும் ஸாலிஹ் ஜஸ்ரா கூறுகிறார். இவர் பலமானவர் அல்ல என்று அபூ அலீ நைஸாபூரி கூறுகிறார். ஷுஃபா அவர்களின் பலவீனமான ஆசிரியர்களில் இவரும் ஒருவர் என்று அல்அஹ்வஸ் கூறுகிறார்.நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 1, பக்கம்: 125
இவரைப் பற்றி ஒரு அறிஞர் கூட நல்ல அபிப்பிராயம் கொள்ளவில்லை. பொய்யர் என்றும் பலவீனர் என்றும் சந்தேகிக்கப்பட்ட இவர் வழியாக மட்டுமே இச்செய்தி அறிவிக்கப்படுவதால் 20 ரக்அத் தொழ வேண்டும் என்ற கருத்துடையவர்கள் கூட இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.
தராவீஹ் 20 ரக்அத்களா? என்ற நூலில் ஜமாஅத்துல் உலமாவின் மூத்த தலைவரான நிஜாமுத்தீன் மன்பயீ பின்வருமாறு எழுதுகிறார்.
நபியவர்கள் இருபது தொழுதுள்ளார்களா?
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலான் மாதத்தில் இருபது ரக்அத்களும் வித்ரும் தொழுபவர்களாக இருந்துள்ளார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அப்துப்னு ஹுமைத் (ரஹ்) அவர்கள் தங்களுடைய முஸ்னதிலும், பஙவி (ரஹ்) அவர்கள் தங்களுடைய முஃஜமிலும், தப்ரானீ (ரஹ்) அவர்கள் கபீரிலும், பைஹகீ (ரஹ்) அவர்கள் தங்களுடைய சுனனிலும் அறிவித்துள்ளார்கள். அனைவரும் இப்னு அபீஷைபா (ரஹ்) அவர்களின் வழியாகவே இதனை அறிவித்துள்ளனர். ஆனால் இதனுடைய அறிவிப்பாளர்களில் இப்றாஹீம் என்பவர் பலவீனமான அறிவிப்பாளர் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே இந்த ஹதீஸ் பலவீனமான அறிவிப்புத் தொடருள்ளதாக இருப்பதால், முஹத்திஸீன்களுடைய அளவுகோள்படியுள்ள ஆதாரப்பூர்வமான முறையில் தராவீஹ் தொழுகை இருபது ரக்அத்கள் என்பது உறுதிப்படுத்தப்படவில்லையானாலும் உமர் (ரலி) அவர்களின் நடைமுறையைக் கொண்டு அது தரிபடுத்தப்பட்டு ஏனைய ஸஹாபாக்கள் அனைவரும் மறுப்பேதும் தெரிவிக்காமல் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
(நன்றி : நிஜாமுத்தீன் மன்பஈ எழுதிய 'தராவீஹ் 20 ரக்அத்களா?' என்ற நூல், பக்கம் 69, 70)
ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருபது ரக்அத்துகள் தொழுதார்கள் என்ற கருத்தில் இடம் பெறும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்பதை இதன் மூலம் சந்தேகத்துக்கிடமின்றி அறிந்து கொள்ளலாம். ஆனால் நபியவர்கள் எட்டு ரக்அத் தொழுகை நடத்தியதாக வலுவான அறிவிப்புகள் உள்ளன.
ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எட்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். பின்னர் வித்ரு தொழுதார்கள். மறு நாள் இரவு நாங்கள் பள்ளி வாசலில் கூடினோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து எங்களுக்குத் தொழுகை நடத்துவார்கள் என்று எதிர்பார்த்து சுப்ஹு வரை காத்திருந்தோம். (சுப்ஹுக்கு வந்த) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வந்து தொழ வைப்பீர்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்' என்று கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'உங்கள் மீது வித்ரு கடமையாக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சி விட்டேன்' என்று விளக்கமளித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: இப்னு ஹிப்பான் 10/301, தப்ரானியின் ஸகீர் 2/127முஸ்னத் அபீயஃலா 4/370
ஜாபிர் (ரலி) கூறியதாக இதை அறிவிக்கும் ஈஸா பின் ஜாரியா என்பவர் பற்றி சிலர் குறை கூறியுள்ளனர். சிலர் உயர்வாகக் கூறியுள்ளனர். தஹபீ அவர்கள் இது நடுத்தரமான தரத்தில் அமைந்தது என்கிறார். ஆய்வு செய்வதில் வல்லவரான தஹபீ கூறுவது தான் சரியானது என்று இப்னு ஹஜர் வழிமொழிகிறார்.
நம்மைப் பொறுத்த வரை இது போன்ற தரத்தில் உள்ளதை ஆதாரமாகக் கொள்வதில்லை. ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 20 ரக்அத்கள் தொழ வைத்தார்கள் என்ற ஹதீஸை விட இது எத்தனையோ மடங்கு தரத்தில் உயர்ந்தது என்பதற்காகவே இங்கே இதைச் சுட்டிக் காட்டுகிறோம்.
உபை பின் கஅபு அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! ரமளான் மாதத்தின் நேற்றைய இரவில் எனக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டு விட்டது' என்றார். 'என்ன பிரச்சனை?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். அதற்கவர், 'நாங்கள் குர்ஆன் ஓதத் தெரியாதவர்களாக இருக்கிறோம்; எனவே உங்களைப் பின்பற்றி நாங்கள் தொழுகிறோம்' என்று என் வீட்டில் உள்ள பெண்கள் கேட்டனர். அவர்களுக்கு எட்டு ரக்அத்கள் தொழுவித்து, பின்னர் வித்ரும் தொழுவித்தேன்' என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த மறுப்பும் கூறாமல் மறைமுகமாகச் சம்மதம் தெரிவித்தனர்.அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)நூல்: முஸ்னத் அபீயஃலா 3/336
இதையும் ஈஸா பின் ஜாரியாவே அறிவிக்கிறார். இதுவும் நடுத்தரமான தரத்தில் உள்ள ஹதீஸ் தான்.
ரமளானில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 20 ரக்அத்கள் தொழுதார்கள் என்ற கருத்திலமைந்த ஹதீஸ் அளவுக்கு இது பலவீனமானதல்ல என்பதற்காக இதை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை குறித்து இத்தலைப்பின் துவக்கத்தில் நாம் எடுத்துக் காட்டிய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் நமக்குப் போதுமானதாகும்.
ரமளானிலோ, ரமளான் அல்லாத மாதங்களிலோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 20 ரக்அத்கள் தொழுததாக ஆதாரப்பூர்வமான ஒரு செய்தியும் இல்லை எனும் போது அதை விட்டொழித்து, நபிவழியைப் பேண வேண்டாமா? என்பதை முஸ்ம்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
20 ரக்அத்தும் நபித்தோழர்களும்
20 ரக்அத்களுக்கு நபிவழியில் ஒரு ஆதாரமும் இல்லை எனும் போது அதை விட்டொழிப்பதற்குப் பதிலாக எப்படியாவது நியாயப்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 20 ரக்அத்கள் தொழவில்லை என்பது உண்மையே! ஆனால் நபித்தோழர்கள் குறிப்பாக உமர் (ரலி) அவர்கள் 20 ரக்அத்கள் தொழுதுள்ளனரே!' என்று வாதிடுகின்றனர்.
உமர் (ரலி) உள்ளிட்ட நபித்தோழர்கள் 20 ரக்அத்களை உருவாக்கினார்களா? என்பதைப் பின்னர் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.
ஒரு வாதத்துக்காக சில நபித்தோழர்கள் 20 ரக்அத்கள் தொழுததாகவே வைத்துக் கொள்வோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் தான் செய்துள்ளார்கள் என்று தெரிந்து, அதற்கு மாற்றமாக நபித் தோழர்கள் சிலர் செய்ததாகத் தெரியும் போது இரண்டில் எது சிறந்தது?
உமர் (ரலி) அவர்கள் சிறந்தவர்கள் என்பதற்கு இவர்கள் காட்டும் ஆதாரத்தை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறந்தவர்கள் என்பதற்கு ஆதாரம் தேவையா?
நபியா? நபித்தோழரா? என்று கேள்வி வரும் போது நபியைப் புறக்கணித்து விட்டு நபித் தோழரைத் தூக்கிப் பிடிப்பது இஸ்லாத்தை விட்டும் நம்மை அப்புறப்படுத்தாதா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தான் வஹீ வரும். நபித்தோழருக்கு வஹீ வராது என்பதைக் கூட அறிய வேண்டாமா?
நன்மை செய்வதில் நபித் தோழர்கள் நபிகள் நாயகத்தையும் மிஞ்சியவர்களா?
நபியவர்கள் மூலம் மார்க்கத்தை அல்லாஹ் முழுமையாக்கியிருக்கும் போது அவர்கள் கற்றுத் தராததை நபித் தோழர்கள் கண்டுபிடித்தார்கள் என்றால் மார்க்கத்தை நபிகள் நாயகம் முழுமையாக்கவில்லை என்ற கருத்து வருமே! இது சரி என்கிறார்களா?
அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில விஷயங்களை மறைத்து விட்டார்கள்; அதை நபித் தோழர்கள் அம்பலமாக்கி விட்டார்கள் என்பது இவர்களின் எண்ணமா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் தேர்வு செய்து தன் தூதராக நியமித்தான். முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் எதனையும் கூட்டாமல் குறைக்காமல் அவர்கள் மூலம் இறைவன் கற்றுத் தந்தான் என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை நம்பக் கூடியவர்களுக்கு நபிவழியே போதுமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழி போதாது; அது சரியில்லை; அதற்கு முரணாக நபித் தோழர்கள் காட்டியது தான் சரியானது என்று நம்புவதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காக்க வேண்டும்.
உமர் (ரலி) 20 ரக்அத் தொழுதார்களா?
நபித் தோழர்கள் 20 ரக்அத் தொழுதது நிரூபணமானால் கூட நபிவழி அதற்கு மாற்றமாக இருந்தால் நபிவழியைத் தான் ஏற்க வேண்டும்.
ஆனால் உண்மை என்னவென்றால், உமர் (ரலி) அவர்கள் 20 ரக்அத்களை உருவாக்கித் தந்தார்கள் என்ற இவர்களது வாதம் முற்றிலும் தவறானதாகும். உமர் (ரலி) அவர்கள் தொடர்பான செய்திகளை முழுமையான கவனத்துடன் ஆய்வு செய்யத் தவறியதால் இத்தகைய முடிவுக்குச் சிலர் வந்து விட்டனர். எனவே உமர் (ரலி) அவர்கள் தொடர்பான 20 ரக்அத்கள் பற்றிய அறிவிப்புக்களை ஆய்வு செய்வோம்.
அறிவிப்பு 1
மக்களுக்கு இருபது ரக்அத் தொழுகை நடத்துமாறு உமர் (ரலி) அவர்கள் ஒரு மனிதருக்குக் கட்டளையிட்டார்கள்.நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா
உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கட்டளையிட்டதாக அறிவிப்பவர் யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரியாவார். இவர் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர் அல்ல!
உமர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 23ஆம் ஆண்டு மரணித்தார்கள். யஹ்யா பின் ஸயீத் அன்ஸாரி அவர்கள் ஹிஜ்ரி 139 அல்லது 144வது ஆண்டு மரணித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள் மரணித்து 120 வருடங்களுக்குப் பின்னால் மரணித்தவர் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறந்திருக்க முடியாது.
உமர் (ரலி) 20 ரக்அத் தொழுமாறு கட்டளையிட்டதை அவரது காலத்தில் வாழ்ந்தவர் தான் அறிய முடியும். எனவே இந்தச் செய்தி ஆதாரமாகக் கொள்ளத்தக்கதல்ல என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால் உமர் (ரலி) அவர்கள் இதற்கு மாற்றமாகக் கட்டளையிட்டதாக ஆதாரப்பூர்வமான செய்தி உள்ளது.
நூல்: மஃரிஃபதுஸ் ஸுனன் வல் ஆஸார் - பைஹகீ
நூல்: பைஹகீ
நூல்: ஷரஹ் மஆனில் ஆஸார்
நூல்: முஅத்தா
நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா - நஸயீ
மக்களுக்குப் பதினொரு ரக்அத்துகள் தொழுவிக்குமாறு உபை பின் கஅப், தமீமுத்தாரி ஆகிய இருவருக்கும் உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
நூல்கள்: அஸ்ஸுனனுல் குப்ரா - நஸயீ, முஅத்தா, ஷரஹ் மஆனில் ஆஸார், பைஹகீ, மஃரிஃபதுஸ் ஸுனன் வல் ஆஸார்
உமர் (ரலி) அவர்கள் பதினொரு ரக்அத்கள் தொழுவிக்குமாறு கட்டளையிட்டது ஆதாரப்பூர்வமானதாக இருப்பதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்பவும் அமைந்துள்ளது.
அறிவிப்பு 2
உமர் (ரலி) அவர்களின் காலத்தில் நாங்கள் இருபது ரக்அத்கள் தொழுது வந்தோம் என்று ஸாயிப் பின் யஸீத் கூறுகிறார்.நூல்: பைஹகீ ஸகீர்
இந்த அறிவிப்பில் அபூ உஸ்மான் அல் பஸரீ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரது இயற்பெயர் அம்ரு பின் அப்துல்லாஹ். இவரது நம்பகத் தன்மையைக் குறித்து ஹதீஸ் கலை வல்லுனர்கள் யாரும் உறுதிப்படுத்தவில்லை. யாரென்று அறியப்படாதவர் என்ற நிலையில் இவர் இருக்கிறார். இதன் காரணமாக இச்செய்தி பலவீனமடைகிறது.
மேலும் இந்தச் செய்தியில் உமர் (ரலி) அவர்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்களின் காலத்தில் மக்கள் இவ்வாறு செய்ததாக இந்த அறிவிப்பு கூறுகிறது ஆனால் மேலே நாம் எடுத்துக் காட்டிய அறிவிப்பில் உமர் (ரலி) நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளனர்.
ஒருவர் எதைக் கட்டளையிடுகிறாரோ அதில் தான் அவருக்குச் சம்பந்தம் இருக்கும். அவரது காலத்தில் நடந்தவைகளில் அவருக்குச் சம்பந்தம் இருப்பது சந்தேகத்திற்கிடமானது.
மேலும் இதே ஸாயிப் பின் யஸீத் அவர்கள் உமர் (ரலி) அவர்கள் பதினொரு ரக்அத்துகள் தொழுவிக்குமாறு கட்டளையிட்டதாக அறிவிக்கிறார்.
மக்களுக்குப் பதினொரு ரக்அத்துகள் தொழுவிக்குமாறு உபை பின் கஅப், தமீமுத்தாரி ஆகிய இருவருக்கும் உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
நூல்: முஅத்தா
ரக்அத்களின் எண்ணிக்கை குறித்து ஸாயிப் பின் யஸீத் முரண்பட்டு அறிவித்துள்ளதால் 20 ரக்அத் தொழுதோம் என்ற அறிவிப்பு மேலும் பலவீனப்படுகிறது.
அறிவிப்பு 3
உமர் (ரலி) அவர்கள் காலத்தில் ரமளான் மாதத்தில் மக்கள் இருபத்து மூன்று ரக்அத்கள் தொழுது வந்தனர் என்று யஸீத் பின் ரூமான் அறிவிக்கிறார்.நூல்: பைஹகீ, முஅத்தா
இதை அறிவிக்கும் யஸீத் பின் ரூமான் உமர் (ரலி) காலத்தவர் அல்ல! உமர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 23ல் மரணித்தார்கள். யஸீத் பின் ரூமான் ஹிஜ்ரி 130ல் மரணித்தார்கள். அதாவது உமர் (ரலி) அவர்கள் மரணித்து 107 ஆண்டுகளுக்குப் பின் இவர் மரணித்துள்ளார். இவர் நூறு வயதில் மரணித்திருந்தால் கூட உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறந்திருக்க மாட்டார்.
உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறக்காத யஸீத் பின் ரூமான் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் நடந்ததை அறிவிப்பதால் இதை ஹதீஸ் கலை வல்லுனர்கள் ஆதாரமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
உமர் (ரலி) அவர்களின் வழிமுறையைத் தான் ஏற்போம் என்று கூறுவதில் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் பதினொரு ரக்அத் தான் தொழ வேண்டும்.
அலீ (ரலி) அவர்கள் பெயரால்...
உமர் (ரலி) அவர்கள் பெயரால் இருபது ரக்அத்களை நியாயப்படுத்துவதுடன் அலீ (ரலி) அவர்கள் பெயரைப் பயன்படுத்தியும் நியாயப்படுத்துகின்றனர்.
ஐந்து இடைவெளியுடன் இருபது ரக்அத்கள் தொழுவிக்குமாறு அலீ (ரலி) அவர்கள் ஒருவருக்குக் கட்டளையிட்டார்கள் என்ற செய்தி அபுல் ஹஸனா என்பார் வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.நூல்கள்: பைஹகீமுஸன்னப் இப்னு அபீஷைபா
அபுல் ஹஸனா என்பவர் யாரென்று அறியப்படாதவர் என்று இப்னு ஹஜர், தஹபீ உள்ளிட்ட அறிஞர்கள் முடிவு செய்துள்ளார்கள். இவரது நம்பகத் தன்மையை எந்த அறிஞரும் உறுதிப்படுத்தவில்லை. எனவே இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது.
ரமளான் மாதத்தில் அலீ (ரலி) அவர்கள் அறிஞர்களை அழைத்து, அவர்களில் ஒருவரை 20 ரக்அத் தொழுவிக்குமாறு கட்டளையிட்டார்கள். வித்ரு தொழுகையை அலீ (ரலி) அவர்கள் தாமே தொழுவிப்பார்கள்.அறிவிப்பவர்: அபூ அப்துர்ரஹ்மான் அஸ்ஸுலமிநூல்: பைஹகீ
இதன் அறிவிப்பாளரான அபூ அப்துர்ரஹ்மானிடமிருந்து அறிவிப்பவர் அதா பின் ஸாயிப் ஆவார்.
அதா பின் ஸாயிப் இவ்வாறு கூறியதாக அறிவிப்பவர் ஹம்மாத் பின் ஷுஐபு ஆவார்.
தஹபீ, இப்னு மயீன், புகாரி, நஸயீ, இப்னு அதீ உள்ளிட்ட அறிஞர்கள் இவரை (ஹம்மாத் பின் ஷுஐபை) பலவீனமானவர் எனக் கூறியுள்ளனர்.
எனவே அலீ (ரலி) அவர்கள் 20 ரக்அத் என்ற நடைமுறையை உருவாக்கினார்கள் என்ற வாதம் அடிபட்டுப் போகிறது.
அதிகப்படுத்துவது தவறா?
20 ரக்அத் தொழுகைக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெளிவாகத் தெரிந்த பின்பும் ஏதாவது காரணம் கூறி அதைச் சிலர் நியாயப்படுத்த முயன்று வருகின்றனர்.
20 ரக்அத்துக்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் நன்மைகளை அதிகம் செய்வது தவறா? என்பது அந்தக் காரணங்களில் ஒன்றாகும்.
அதிகமாகச் செய்கிறோமா? குறைவாகச் செய்கிறோமா? என்பது பிரச்சனையில்லை. அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தந்த படி செய்கிறோமா? என்பது தான் இஸ்லாத்தில் கவனிக்கப்படும். இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாததால் தான் இத்தகைய வாதத்தை எடுத்து வைக்கின்றனர்.
இதற்கான ஆதாரங்களை அறிந்து கொள்வதற்கு முன் அனைவரும் ஒப்புக் கொண்ட விஷயங்களில் சிலவற்றை முதலில் எடுத்துக் காட்டுகிறோம்.
சுபுஹ் தொழுகைக்கு இரண்டு ரக்அத்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்து வைத்துள்ளோம்.
இது குறைந்த அளவாக உள்ளது என்று எண்ணிக் கொண்டு ஒருவர் சுபுஹ் தொழுகைக்கு நான்கு ரக்அத் தொழலாமா? என்ற கேள்விக்கு மார்க்க அறிஞர்கள் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம்களும் இவ்வாறு செய்யக் கூடாது என்று தான் பதிலளிப்பார்கள்.
இரண்டு ரக்அத்தை விட நான்கு ரக்அத்கள் அதிகம் தானே! அதனால் சுப்ஹுக்கு நான்கு ரக்அத் தொழலாம் என்று யாரும் வாதிடுவதில்லை. இதற்கு என்ன காரணம்?
ரக்அத்களின் எண்ணிக்கை இதில் முக்கியம் அல்ல! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு ஒரு வழியைக் காட்டியுள்ளனர்; அவர்கள் காட்டியதை விட அதிகப்படுத்தினால் அதில் பல விபரீதமான முடிவுகள் ஏற்பட்டு விடும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குச் சிறந்த வழியை, முழுமையான வழியைக் காட்டவில்லை; அதை நாங்கள் கண்டு பிடித்து விட்டோம்' என்று கூறும் விபரீதம் இதனுள் அடங்கியுள்ளது.
நாம் இரண்டை நான்காக ஆக்கினால் அடுத்து வருபவர் அதை ஆறாக ஆக்குவார். அடுத்த ஒரு காலத்தில் அது எட்டாக ஆகும். வணக்கத்தை நாங்கள் குறைக்கவில்லையே? அதிகப்படுத்துவது நல்லது தானே என்று அனைவரும் வாதிடுவார்கள். இதனால் இஸ்லாம் என்ற பெயரால் உலகெங்கும் முரண்பட்ட பல வணக்கங்கள் உருவாகி விடும்.
எனவே தான் இரண்டு ரக்அத்தை நான்காக ஆக்கக் கூடாது என்கிறோம்.
வணக்கம் செய்வதில் நம் அனைவரையும் விஞ்சி நிற்கின்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருபது ரக்அத்களைத் தொழுது வழி காட்டவில்லை எனும் போது நாம் அதிகப்படுத்துவதை மட்டும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று சிந்தித்தாலே இந்த வாதத்தை யாரும் எடுத்து வைக்க மாட்டார்கள்.
இதுபற்றி அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்.
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகின்றீர்கள்!திருக்குர்ஆன் 7:3
'இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்' என்று கூறினோம்.திருக்குர்ஆன் 2:38
இருவரும் ஒட்டுமொத்தமாக இங்கிருந்து இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்குப் பகைவர்களாவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வருமானால் எனது நேர் வழியைப் பின்பற்றுபவர் வழி தவற மாட்டார்; துர்பாக்கியசாலியாகவும் மாட்டார்.திருக்குர்ஆன் 20:123
அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது 'செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.திருக்குர்ஆன் 24:51
'அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!' என கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை. திருக்குர்ஆன் 24:54
'நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்' என்று கூறுவீராக!திருக்குர்ஆன் 3:31
இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரு) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.திருக்குர்ஆன் 6:153
தமது மார்க்கத்தைப் பிரித்து, பல பிரிவுகளானோரின் எந்தக் காரியத்திலும் (முஹம்மதே!) உமக்குச் சம்மந்தம் இல்லை. அவர்களின் விஷயம் அல்லாஹ்விடமே உள்ளது. பின்னர் அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்திருக்குர்ஆன். 6:159
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.திருக்குர்ஆன் 4:59
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.திருக்குர்ஆன் 33:36
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் திருக்குர்ஆன் 5:3
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது பற்றிப் பல விதங்களில் எச்சரிக்கை செய்துள்ளனர்.
எனது கட்டளையில்லாமல் யாரேனும் ஒரு வணக்கத்தைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: முஸ்லிம் 3442
'இந்த மார்க்கத்தில் இல்லாததை யாரேனும் உண்டாக்கினால் அது ரத்துச் செய்யப்படும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: புகாரி 2697
'(மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை பற்றி உங்களை நான் எச்சரிக்கிறேன். புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் (பித்அத்எனும்) அனாச்சாரமாகும். அனாச்சாரங்கள் அனைத்தும் வழிகேடாகும். வழிகேடுகள் யாவும் நரகத்தில் சேர்க்கும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)நூல்: நஸயீ 1560
மார்க்கத்தின் பெயரால் வணக்கத்தை உண்டாக்குவதும் அதிகப்படுத்துவதும் குற்றம் என்பதையும், அதனால் சொர்க்கம் கிடைப்பதற்குப் பதிலாக நரகம் தான் கிடைக்கும் என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
உபரியான வணக்கம் என்பது என்ன?
இந்த இடத்தில் நியாயமான ஒரு சந்தேகம் ஏற்படலாம்.
மார்க்கத்தில் நாமாக விரும்பிச் செய்கின்ற நபில்கள் எனும் உபரியான வணக்கம் இல்லையா? எட்டு ரக்அத் போக எஞ்சியதை உபரி வணக்கம் என்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? என்பது தான் அந்தச் சந்தேகம்.
கடமையான நோன்புகள், சுன்னத்தான நோன்புகள் போக ஒருவர் தனக்கு விருப்பம் ஏற்படும் போது உபரியான நோன்பை நோற்கலாம்.
அது போல் கடமையான, சுன்னத்தான தொழுகை போக நாம் விரும்பும் போது உபரியாகத் தொழலாம் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் உபரியான தொழுகைக்கும், சுன்னத்தான தொழுகைக்கும் வேறுபாடுகள் உள்ளன.
கடமையான தொழுகை அல்லது நோன்பு, சுன்னத்தான தொழுகை அல்லது நோன்பு அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரே அளவு கொண்டதாக அமையும்.
உபரியான தொழுகை அல்லது நோன்பு என்பது தனிப்பட்ட மனிதன் விரும்பித் தேர்வு செய்வதால் அது அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒருவருக்கு நேரம் கிடைத்தால் ஒரு புதன் கிழமை நோன்பு வைப்பார். அந்த நேரத்தில் கோடானு கோடி முஸ்லிம்கள் நோன்பு வைக்க மாட்டார்கள். இன்னொருவர் ஒரு செவ்வாய்க் கிழமை நோன்பு நோற்பார். அந்த நாளில் கோடான கோடி முஸ்லிம்கள் நோன்பு வைக்க மாட்டார்கள்.
முஹர்ரம் 9, 10ல் நோன்பு நோற்பது சுன்னத் என்றால் உலக முஸ்லிம்கள் அனைவரும் அந்த நாட்களில் நோன்பு நோற்பது சுன்னத்.
ஒருவர் விரும்பிய தினத்தில் நோன்பு நோற்க அனுமதி உள்ளது என்பதை ஒப்புக் கொள்ளும் அறிஞர்கள் மிஃராஜ் நோன்பு என்பதை மறுக்கின்றனர். இதற்குக் காரணம் இந்தப் பெயரில் முஸ்லிம்கள் அனைவரும் நோன்பு நோற்க வேண்டும் என்ற அடிப்படையில் இது கூறப்படுகிறது. எனவே தான் இதை பித்அத் என்கிறோம்.
சுன்னத் என்றால் இஷ்டம் போல் கூட்டவோ, குறைக்கவோ முடியாது. நபில் என்றால் ஒரு நாள் இரண்டு ரக்அத்கள் தொழுதவர் மறு நாள் நான்கு தொழலாம். அதற்கு மறு நாள் அதை விட்டு விடலாம். நபில் என்பது முழுக்க முழுக்க தனித் தனி நபர்களின் விருப்பத்தின் பாற்பட்டதாகும்.
இப்போது தராவீஹ் என்ற பெயரில் தொழும் தொழுகையை எடுத்துக் கொள்வோம். குர்ஆன், நபிவழி ஆதாரமின்றி 20 ரக்அத் என்று தீர்மானித்துக் கொண்டு அதை அனைவர் மீதும் திணிக்கின்றனர். இது தான் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய, மார்க்கத்தின் கட்டளை எனவும் தவறாக நம்புகின்றனர்.
இவர்கள் தொழும் தராவீஹ் என்பதற்கு உபரியான வணக்கம் என்ற வாதம் பொருந்தாது.
உபரியான வணக்கத்துக்கு இன்னும் சில நிபந்தனைகள் உள்ளன.
நபிகள் நாயகம் காட்டித் தந்த வணக்கத்தைத் தான் மேலதிகமாக ஒருவர் செய்ய அனுமதி உண்டு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தராத ஒன்றைச் செயல்படுத்துவது நபில் எனும் உபரியான வணக்கத்தில் சேராது.
உதாரணமாக தராவீஹ் தொழுகையின் நான்கு ரக்அத்களுக்கிடையில் சில திக்ருகளை ஓதுகின்றனர். இந்த திக்ருகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குத் கற்றுத் தரவில்லை. அவர்கள் கற்றுத் தராத ஒன்றை கற்பனையாக உருவாக்கிக் கொண்டு நாங்களாக விருப்பப்பட்டு ஓதுகிறோம் என்று வாதிட்டால் அது ஏற்கப்படாது.
மார்க்கம் வரையறுத்துள்ள எல்லையைக் கடந்து விடாத அளவுக்கு உபரி வணக்கங்கள் இருக்க வேண்டும் என்பது மற்றொரு நிபந்தனை.
தினமும் முழுக் குர்ஆனை ஓதி முடிப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தனர். உபரி என்ற பெயரில் இந்த எல்லையை மீறக் கூடாது. (புகாரி 1978)
உடலுக்கும், மனைவிக்கும், குடும்பத்தாருக்கும் செய்ய வேண்டிய கடமைகளைப் பாதிக்கும் வகையில் உபரியான வணக்கம் இருக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லை வகுத்தனர். இந்த எல்லையை மீறி உபரி வணக்கம் கூடாது. (புகாரி 1968, 1975, 5199, 6134, 6139)
எனவே உபரியான வணக்கத்தின் இலக்கணத்தை அறியாமல் இது போன்ற வாதங்களை எடுத்து வைத்து 20 ரக்அத்தை நியாயப்படுத்த எந்த முகாந்திரமும் இல்லை.
மக்கா, மதீனாவில் நடக்கிறதே?
இருபது ரக்அத்தை நியாயப்படுத்தக் கூடியவர்கள் எடுத்துக் காட்டும் மற்றொரு ஆதாரம் இது தான்.
சவூதி அரேபியாவில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும் எட்டு அல்லது பத்து ரக்அத்கள் தான் தொழுவிக்கப்படுகின்றன. ஆயினும் மக்காவின் மஸ்ஜிதுல் ஹராமிலும், மதீனாவின் மஸ்ஜிதுன் நபவியிலும் மட்டும் இருபது ரக்அத்கள் தொழுவிக்கப்படுகின்றது. அதையே நாம் ஏன் முன்னுதாரணமாக ஆக்கக் கூடாது என்ற கேள்வி தவறாகும்.
மக்காவையும் மதீனாவையும் வணக்க வழிபாடுகளுக்கு முன்னுதாரணமாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளை பிறப்பிக்கவில்லை.
மாறாக, நான் எவ்வாறு தொழுதேனோ அவ்வாறு தொழுங்கள்' என்பது தான் அவர்களின் கட்டளை. (புகாரி 631, 6008, 7246)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டாத வணக்கத்தை உருவாக்கவோ, அல்லது அதிகப்படுத்தவோ மக்கா, மதீனா வாசிகளுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை.
இதற்கான ஆதாரங்களை முன்னரே நாம் எடுத்துக் காட்டியுள்ளோம்.
இந்த வாதத்தை எழுப்புவோரிடம் காணப்படும் முரண்பாட்டையும் நாம் இங்கே சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
இருபது ரக்அத் தொழுகைக்கு மட்டும் சவூதி அரேபியாவை ஆதாரமாகக் காட்டும் மார்க்க அறிஞர்கள், ஏராளமான விஷயங்களில் சவூதி அரேபியாவை ஆதாரமாகக் கொள்வதில்லை.
சவூதி அரேபியாவில் நான்கு மத்ஹபுகள் இல்லை. அதை இவர்கள் முன்மாதிரியாகக் கொள்ள மாட்டார்கள்.
சவூதி அரேபியாவில் கத்தம் பாத்திஹா, மவ்லூது, தாயத்து, தகடு, புரோகிதம் கிடையாது. அதை முன்னுதாரணமாகக் கொண்டு இவர்கள் இந்தச் செயல்களை விட்டொழிப்பதில்லை.
சவூதி அரேபியாவில் தரீக்கா, ராத்திபு, முரீது, பால்கிதாபு, நல்ல நாள் பார்த்தல் உள்ளிட்ட மூட நம்பிக்கைகள் இல்லை. இதை ஏன் இவர்கள் முன்மாதிரியாகக் கொள்வதில்லை?
சவூதியில் நடப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் இவர்கள் உண்மையாளர்களாக இல்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
மக்கா, மதீனாவில் செய்யப்படும் காரியங்கள் குர்ஆன் ஹதீசுக்கு எதிராக இருந்தால் அதை ஏற்க வேண்டும் என்பதற்கு எந்த நியாயமும் இல்லை.
தொழுகையில் நிதானம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தராத இருபது ரக்அத் என்ற வழிமுறையை நாமாக உருவாக்கியதால் தொழுகையில் கடைப் பிடிக்க வேண்டிய பல ஒழுங்குகளை நாம் அலட்சியம் செய்து வருகிறோம்.
குறிப்பிட்ட நேரத்துக்குள் இருபது ரக்அத்களைத் தொழ வேண்டும் என்று வரையறுத்துக் கொண்டு தொழுவதால் அனைத்துக் காரியங்களும் மிக விரைவாகச் செய்யப்படுகின்றன.
ருகூவு, ஸஜ்தாக்களில் ஓத வேண்டியதை ஓதி நிதானமாகக் குனிந்து நிமிர வேண்டும். இந்த ஒழுங்குகளைப் பேணாமல் தொழுத ஒரு மனிதரைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர் தொழவே இல்லை என்று கடுமையாக எச்சரித்தனர்.(பார்க்க: புகாரி 389, 757, 793, 6251, 6667)
இந்த எச்சரிக்கையும் இருபது ரக்அத் என்ற பெயரில் மீறப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதியதைப் போன்றும், ருகூவு, சுஜுது செய்ததைப் போன்றும் ஒருவர் தொழுவதாக இருந்தால் இவர்கள் இருபது ரக்அத் தொழும் நேரத்தில் எட்டு ரக்அத்கள் தொழுவது கூடச் சாத்தியமாகாது. இன்றைக்கும் நடைமுறையில் இருபது ரக்அத் தொழுகைக்கு மற்றவர்கள் எடுத்துக் கொள்ளும் நேரத்தை விட எட்டு ரக்அத்துக்கு நாம் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறோம்.
நாம் ஒரு பொருளை வாங்குவது என்றால் தரமானதைத் தான் வாங்குவோம். கிழிந்த துணி பத்து ரூபாய்க்குக் கிடைத்தாலும் கிழியாத துணியை நூறு ரூபாய்க்கு வாங்குவோம்.
குறைந்த விலையில் பூச்சிக் கத்தரிக்காய் கிடைத்தாலும் அதிக விலை கொடுத்து நல்ல கத்தரிக்காய் வாங்குகிறோம்.
அல்லாஹ்வுக்குச் செய்யும் வணக்கத்தை மட்டும் கிழிந்த துணிக்கு நிகரான தரத்தில் அதிகமாகச் செய்கிறோம். அல்லாஹ் எண்ணிக்கையை விட தரத்தைத் தான் பார்ப்பான் என்பதை அறிந்தால் கோழி கொத்துவது போன்ற இருபது ரக்அத்திலிருந்து விலகி அதை விட அதிக நேரம் செலவிட்டு நபிவழியில் தொழ முன் வந்திடுவோம்.
முழுக் குர்ஆனையும் ஓதுதல்
ரமளான் மாதத்தில் முழுக் குர்ஆனையும் தொழுகையில் ஓத வேண்டும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாகக் காணப்படுகிறது. இதற்காகக் குர்ஆன் மனனம் செய்தவரைத் தொழ வைப்பதற்காக நியமிக்கின்றனர். தினமும் ஒரு ஜுஸ்வு என்ற கணக்கில் ஓதி அவர் தொழ வைத்து ரமளான் மாதத்தில் குர்ஆனை முடிப்பார் என்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.
இதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த ரமளான் மாதத்திலும் முழுக் குர்ஆனையும் ஓதியிருக்கவே முடியாது.
குர்ஆன் ஓரே சமயத்தில் ஒட்டு மொத்தமாக அவர்களுக்கு அருளப்படவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் குர்ஆன் அருளி முடிக்கப்பட்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
அவர்கள் நபியாக நியமிக்கப்பட்ட முதல் வருடத்தில் குர்ஆனின் மிகச் சிறிய பகுதிகளே அவர்களுக்கு அருளப்பட்டன.
இப்படியே ஒவ்வொரு வருடமும் சிறிது சிறிதாகக் குர்ஆன் இறங்கிக் கொண்டே வந்தது.
அவர்களின் கடைசி ரமளானில் கூட முழுக் குர்ஆனும் அருளப்பட்டிருக்க முடியாது.
அவர்களின் கடைசி ரமளானுக்குப் பின்னர் ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ஸஃபர் ஆகிய ஐந்து மாதங்களும் ரபீயுல் அவ்வல் பன்னிரண்டு நாட்களும் வாழ்ந்தனர். இந்தக் கால கட்டத்தில் அருளப்பட்டதும் சேர்த்தே முழுக் குர்ஆன்.
இந்தக் கால கட்டத்தில் அருளப்பட்டதை ரமளானில் ஓத வேண்டுமானால் மறு ரமளானில் தான் சாத்தியம். ரபீயுல் அவ்வலில் அவர்கள் மரணித்து விட்டதால் நிச்சயமாக முழுக் குர்ஆனையும் எந்த ரமளானிலும் அவர்கள் ஓதியிருக்க முடியாது.
மேலும் ரமளானில் முழுக் குர்ஆனையும் ஓதுங்கள் என்று வாய்மொழி உத்தரவு எதுவும் அவர்கள் பிறப்பிக்கவில்லை.
இரவுத் தொழுகையில் ஓதுவது பற்றிக் குர்ஆன் கூறும் போது பின்வருமாறு தெளிவாக விளக்குகின்றது.
'(முஹம்மதே!) நீரும், உம்முடன் உள்ள ஒரு தொகையினரும் இரவில் மூன்றில் இரு பகுதிக்கு நெருக்கமாகவும், இரவில் பாதியும், இரவில் மூன்றில் ஒரு பகுதியும் நின்று வணங்குகின்றீர்கள்' என்பதை உமது இறைவன் அறிவான். அல்லாஹ்வே இரவையும், பகலையும் அளவுடன் அமைத்துள்ளான். நீங்கள் அதைச் சரியாகக் கணிக்க மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிவான். எனவே அவன் உங்களை மன்னித்தான். ஆகவே குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள். உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்வோரும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் உருவாவார்கள் என்பதை அவன் அறிந்து வைத்துள்ளான். எனவே அதில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அதுவே சிறந்தது. மகத்தான கூலி. அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.திருக்குர்ஆன் 73:20
எனவே சிரமமில்லாமல் எந்த அளவுக்கு ஓத இயலுமோ, திருத்தமாக எந்த அளவுக்கு ஓத இயலுமோ அந்த அளவுக்கு ஓதித் தொழுவது தான் நபிவழியாகும்.
நான்கு ரக்அத் முடிவில் தஸ்பீஹ்?
ஒவ்வொரு நான்கு ரக்அத் முடிந்த பின் நீண்ட திக்ருகளை ஓதுகின்றனர்.
முதல் நான்கு ரக்அத் முடிவில் அபூபக்ர் (ரலி) அவர்களைப் புகழ்ந்து போற்றும் வகையிலும்,இரண்டாவது நான்கு ரக்அத் முடிந்த பின் உமர் (ரலி) அவர்களைப் போற்றிப் புகழும் வகையிலும்,மூன்றாவது நான்கு ரக்அத் முடிவில் உஸ்மான் (ரலி) அவர்களைப் போற்றிப் புகழும் வகையிலும், நான்காவது நான்கு ரக்அத்துக்குப் பின் அலீ (ரலி) அவர்களைப் போற்றிப் புகழும் வகையிலும் அமைந்த வாசகங்களை ஓதுகின்றனர்.
இவர்களைப் பற்றியெல்லாம் ஓதுவதிலிருந்தே இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் உள்ள நடைமுறை இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம். தொழுகைக்கு இடையே இவர்களின் பெயர்களைக் கூறும் போது அவர்களுக்காகத் தொழுதது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.
தொழுகை முடிந்த பின் எவரையும் புகழ வேண்டும் என்பது நபிகள் நாயகம் காட்டிய வழி முறை அல்ல என்பதால் இதை விட்டொழிக்க வேண்டும்.
ஜமாஅத்தாகத் தொழுதல்
கடமையான தொழுகை ஜமாஅத்தாகத் தொழுவது ஆண்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதை நாம் அறிவோம். இரவுத் தொழுகை இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளதா என்றால் இல்லை.
சிலர் விரும்பி ஜமாஅத்தாகத் தொழ விரும்பினால் நபிவழியில் அதற்கு அனுமதி உள்ளது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.
மைமூனா (ரலி) வீட்டில் தங்கிய இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பின் வருமாறு கூறுகிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷா தொழுது விட்டு வீட்டுக்கு வந்தார்கள். நான்கு ரக்அத்கள் தொழுது விட்டுத் தூங்கினார்கள். பின்னர் எழுந்தார்கள். சிறுவன் தூங்கி விட்டானா?' என்று கேட்டு விட்டுத் தொழலானார்கள். நான் எழுந்து அவர்களின் வலது புறம் நின்றேன். என்னைத் தமது இடது புறத்தில் ஆக்கினார்கள். அப்போது ஐந்து ரக்அத், பின்னர் இரண்டு ரக்அத் தொழுதார்கள். அவர்களின் குறட்டைச் சத்தத்தை நான் கேட்டும் அளவுக்குத் தூங்கினார்கள். பின்னர் தொழுகைக்குப் புறப்பட்டார்கள்.நூல்: புகாரி 117, 138, 183, 697, 698, 699, 726, 728, 859,992, 1198, 4570, 4571, 4572, 5919, 6316
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை தொழுத போது இப்னு அப்பாஸ் தனியாகத் தொழாமல் நபிகள் நாயகத்துடன் ஜமாஅத்தாகச் சேர்ந்து தொழுதார். இது மார்க்கத்தில் இல்லாதது என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கண்டித்திருப்பார்கள். தொழுது முடித்த பிறகு, இப்படி நடக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. எனவே இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழ அனுமதி உள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது அறையில் இரவுத் தொழுகை தொழுவார்கள். அந்த அறையின் சுவர் குட்டையாக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மக்கள் பார்க்க முடியும். விடிந்ததும் இது பற்றிப் பேசிக் கொண்டனர். இரண்டாம் இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுத போது நபிகள் நாயகத்தைப் பின்பற்றி மக்களில் சிலரும் தொழலானார்கள். இப்படி இரண்டு அல்லது மூன்று இரவுகள் நடந்தன. இதன் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அறைக்கு வராமல்) அமர்ந்து விட்டனர். சுபுஹ் நேரம் வந்ததும் இது பற்றி நபிகள் நாயகத்திடம் மக்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'இரவுத் தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சினேன்' என்று விளக்கமளித்தார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: புகாரி 729, 924, 1129
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓர் இரவின் நடுப் பகுதியில் (வீட்டை விட்டு) வெளியேறி பள்ளிவாசலில் தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி சிலர் தொழுதனர். விடிந்ததும் மக்கள் இது பற்றி பேசிக் கொண்டனர். (இதன் காரணமாக மறு நாள்) மக்கள் மேலும் அதிகரித்து நபிகள் நாயகத்தைப் பின்பற்றித் தொழுதனர். விடிந்ததும் மக்கள் (இது பற்றி) பேசிக் கொண்டனர். மூன்றாம் இரவில் இன்னும் அதிகமாக மக்கள் திரண்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள். நான்காம் இரவு ஆன போது பள்ளிவாசல் கொள்ள முடியாத அளவுக்கு மக்கள் திரண்டனர். (இரவுத் தொழுகைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வராமல்) பஜ்ருத் தொழுகைக்குத் தான் வந்தனர். பஜ்ரு தொழுததும் மக்களை நோக்கித் திரும்பி அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்து விட்டு, 'நீங்கள் இருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை. இத்தொழுகை உங்கள் மேல் கடமையாக்கப்பட்டு அதை நிறைவேற்ற இயலாதவர்களாகி விடுவீர்களோ என்று அஞ்சினேன்' என்று கூறினார்கள். இந்த நிலையிலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: புகாரி 2012
இந்தக் கருத்தில் இன்னும் பல அறிவிப்புக்கள் உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று நாட்கள் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாக நடத்தினார்கள் என்பதும், பின்னர் அதை விட்டு விட்டார்கள் என்பதும் இதிலிருந்து தெரிகிறது.
இந்த ஹதீஸை நாம் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று நாட்கள் மட்டுமே ஜமாஅத்தாகத் தொழுதுள்ளதால் மூன்று நாள் மட்டும் ஜமாஅத்தாகத் தொழுவதே நபிவழி என்று சிலர் புரிந்து கொள்கிறார்கள்.
மூன்று நாட்கள் ஜமாஅத்தாகத் தொழுத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்னர் அதை விட்டு விட்டதால் அதையே நாம் சட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டும்; அதாவது இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது கூடாது. தனித் தனியாகத் தான் தொழ வேண்டும் என்று மற்றும் சிலர் புரிந்து கொள்கிறார்கள்.
இந்த இரண்டு கருத்துக்களுமே தவறாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு செயலைச் செய்தால் அல்லது செய்ததை விட்டு விட்டால் நாமும் அவ்வாறே நடக்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் செயலைச் செய்வதற்கோ, விடுவதற்கோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணம் ஏதாவது கூறியிருந்தால் அதைப் பொதுவானதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அந்தக் காரணம் இருக்கும் வரை அதைக் கடைப்பிடிக்க வேண்டும். அந்தக் காரணம் விலகி விட்டால் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இன்னொரு ஹதீஸை உதாரணமாகக் கொண்டு இதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
இரவில் தூங்கச் செல்லும் போது விளக்கை அணைத்து விடுங்கள். இல்லாவிட்டால் எலிகள் விளக்கை இழுத்துச் சென்று வீட்டைக் கொளுத்தி விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)நூல்: புகாரி 3316, 6295
விளக்கை அணைத்து விடுங்கள் என்று மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி, அதற்கான காரணம் எதையும் கூறாமல் இருந்தால் எந்த விளக்கையும் நாம் இரவில் அணைக்க வேண்டும் என்றே புரிந்து கொள்ள வேண்டும். மின் விளக்குகளைக் கூட தூங்கும் போது அணைத்தாக வேண்டும் என்ற முடிவுக்கு நாம் வருவோம்.
ஆனால் எலிகள் இழுத்துச் சென்று வீடுகளைக் கொளுத்தி விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதற்கான காரணத்தையும் கூறுகிறார்கள். அதாவது எலிகள் இழுத்துச் செல்வதால் வீடுகள் தீப்பற்றி விடும் என்பதே இத்தடைக்குக் காரணம்.
எண்ணெய் ஊற்றி எரிக்கும் விளக்குகளால் தான் இது போன்ற நிலைமை ஏற்படும். மின் விளக்குகளால் இது போன்ற நிலை ஏற்படாது. எனவே நைட் லாம்ப் போன்ற வெளிச்சத்தில் உறங்குவது இந்த நபிமொழிக்கு எதிரானதாக ஆகாது.
இது போல் தான் நபிகள் நாயகம் அவர்கள் மூன்று நாட்கள் மட்டும் ஜமாஅத்தாகத் தொழுது விட்டுப் பின்னர் ஜமாஅத்தை விட்டதற்கு ஒரு காரணத்தைக் கூறுகிறார்கள்.
இரவுத் தொழுகையில் மக்கள் காட்டும் பேரார்வம் காரணமாக இறைவன் இத்தொழுகையை முஸ்லிம்கள் மீது கடமையாக்கி விடுவானோ என்ற அச்சத்தின் காரணமாகவே தொழுகை நடத்த வரவில்லை என்பதே அந்தக் காரணம்.
எந்த ஒரு காரியமும் கடமையாவது என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழியாகத் தான் இறைவன் கடமையாக்குவான். நபிகள் நாயகம் (ஸல்) இறுதி நபி என்பதால் அவர்களுக்குப் பின்னர் எதுவும் கடமையாக முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின் இரவுத் தொழுகையில் மக்கள் எவ்வளவு தான் ஆர்வம் காட்டினாலும் அத்தொழுகை கடமையாகவே போவதில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதற்காக அஞ்சி ஜமாஅத் தொழுகை நடத்த வரவில்லையோ அந்த அச்சம் அவர்களின் மரணத்திற்குப் பின் இல்லாததால் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதற்குத் தடையேதும் இல்லை என்பதே சரியான கருத்தாகும்.
வீடுகளில் தொழுவதே சிறந்தது
பள்ளிவாசல்களில் ஜமாஅத்தாகத் தொழ அனுமதி இருந்தாலும் வீடுகளில் தொழுவதே சிறந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவுரை கூறியுள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் பாய்களால் ஒரு அறையைத் தயார் செய்தார்கள். அதில் சில இரவுகள் தொழுதார்கள். அவர்களின் தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழுதார்கள். இதை அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டிலேயே அமர்ந்து கொண்டார்கள். பின்னர் மக்களிடம் வந்து, 'உங்கள் செய்கையை நான் அறிந்திருக்கிறேன். மக்களே! உங்கள் வீடுகளிலேயே தொழுங்கள். ஏனெனில் கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகைகளை ஒருவர் தனது வீட்டில் தொழுவதே சிறந்தது' என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)நூல்: புகாரி 731, 6113, 7290
இரண்டிரண்டா? நான்கு நான்கா?
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதை அடிப்படையாகக் கொண்டு நான்கு நான்கு ரக்அத்களாகத் தொழலாமா? என்று சந்தேகம் ஏற்படலாம்.
அந்த அறிவிப்பு மட்டும் வந்திருந்தால் நான்கு ரக்அத்களாகத் தொழ வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம்.
அந்த ஹதீஸை அறிவிக்கும் ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு அறிவித்துள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்திலும் ஸலாம் கூறுவார்கள். ஒரு ரக்அத் வித்ரு தொழுவார்கள்.நூல்: இப்னுமாஜா 1167
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்களில் ஸலாம் கொடுப்பார்கள். ஆயினும் நான்கு ரக்அத் முடிந்ததும் சற்று இடைவெளி கொடுப்பார்கள் என்று புரிந்து கொண்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான இரண்டு ஹதீஸ்களும் முரண்பாடு இல்லாமல் பொருந்திவிடும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர், 'இரவுத் தொழுகை பற்றி என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார். மிம்பரில் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'இரவுத் தொழுகை இரண்டிரண்டாகத் தொழ வேண்டும்'என்று விடையளித்தார்கள். நூல்: புகாரி 472, 473, 991, 993, 1137
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில வேளை நான்கு, நான்கு ரக்அத்கள் தொழுதார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீசுக்கு விளக்கம் கொடுத்தாலும் இந்த ஹதீஸ் நமக்குத் தெளிவைத் தருகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தது ஒரு விதமாகவும் நமக்குச் சொன்னது அதற்கு மாற்றமாகவும் இருந்தால் நாம் அவர்களின் சொல்லைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இரவுத் தொழுகை இரண்டிரண்டு என்று தெளிவாக அவர்கள் கூறி விட்டதால் இதையே நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
இரவுத் தொழுகையைப் பிரித்துத் தொழுதல்
நாம் எத்தனை ரக்அத்களைத் தொழுகிறோமோ அதை ஒரே மூச்சில் இடைவெளியில்லாமல் தொழ வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஒரு பகுதியைத் தொழுது விட்டு வேறு வேலைகளில் ஈடுபட்டு விட்டு அல்லது உறங்கிவிட்டு எஞ்சியதைப் பின்னர் தொழலாம்.
நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் இஷாத் தொழுது விட்டு வீட்டுக்கு வந்து நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் தூங்கி எழுந்து ஐந்து ரக்அத் தொழுதார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 117, 697
நிற்க இயலாத போது உட்கார்ந்து தொழலாம்
நின்று தொழ முடியாவிட்டால் அல்லது அது சிரமமாக இருந்தால் உட்கார்ந்தும் தொழலாம். அவ்வாறு தொழும் போது நபிகள் நாயகம் கடைப்பிடித்த வழிமுறையைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு இஷா தொழுவித்து விட்டு என் வீட்டுக்கு வருவார்கள். உடனே இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். இரவில் வித்ரையும் சேர்த்து ஒன்பது ரக்அத்கள் தொழுவார்கள். நீண்ட நேரம் நின்றும் தொழுவார்கள். நீண்ட நேரம் உட்கார்ந்தும் தொழுவார்கள். அவர்கள் நின்ற நிலையில் தொழுதால் நின்ற நிலையிலிருந்து ருகூவு சஜ்தாவுக்குச் செல்வார்கள். உட்கார்ந்த நிலையில் தொழுதால் உட்கார்ந்த நிலையிலிருந்து ருகூவு சஜ்தா செய்வார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1201
இரவுத் தொழுகை விடுபட்டால்...
இரவுத் தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடாமல் தொழுது வந்தனர் என்றாலும் சில நேரங்களில் அவர்கள் இரவுத் தொழுகையை விட்டதற்கும் ஆதாரம் உள்ளது.
நபி (ஸல்) அவர்களுக்கு உடல் நலம் குன்றிய போது ஒரு இரவு அல்லது இரண்டு இரவுகள் அவர்கள் தொழவில்லை.அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி), நூல்: புகாரி 1124, 4983
ஏதேனும் ஒரு காரணத்தால் இரவுத் தொழுகை விடுபட்டு விட்டால் பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வ மற்றும் ஏதோ ஒரு காரணத்தால் இரவுத் தொழுகை தவறி விட்டால் பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1234
நபிகள் நாயகம் (ஸல்) காட்டித் தந்த வழியில் இரவுத் தொழுகை உள்ளிட்ட அனைத்து வணக்கங்களையும் நிறைவேற்றி, மறுமையில் வெற்றி பெற இறைவனை இறைஞ்சுகிறாம்.
நூலின் பெயர்: தராவீஹ் ஓர் ஆய்வு
ஆசிரியர்:பீ.ஜைனுல் ஆபிதீன்